Advertisment

விடைபெறுகிறது ‘ஓகி’ : கன்னியாகுமரி கடலில் தத்தளித்த 38 மீனவர்களை கடற்படை மீட்டது

ஓகி புயலும், கன மழையும் தென் மாவட்டங்களை மிரள வைத்திருக்கிறது. 1993-க்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம் எதிர்கொண்ட கடுமையான புயல், மழை இது!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Ockhi, kanyakumari district, tirunelveli district, north east monsoon

ஓகி புயலும், கன மழையும் தென் மாவட்டங்களை மிரள வைத்திருக்கிறது. 1993-க்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம் எதிர்கொண்ட கடுமையான புயல், மழை இது!

Advertisment

வட கிழக்கு பருவ மழையையொட்டி தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது புயலாக உருவெடுத்தது. அந்தப் புயலுக்கு வங்கதேசம் சூட்டிய பெயர் ‘ஓகி’.

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை இரு நாட்களாக ஓகி உலுக்கி எடுத்திருக்கிறது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் அகற்றி வருகிறார்கள்.

ஒகி புயலால் பாதிப்பு அடைந்த இடங்களில் நடைபெற்ற மீட்பு பணிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் வருவாய் அதிகாரிகள் பார்வையிட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கிலான மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மாவட்டமே இருளில் மூழ்கியது. தொலைத் தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால், மாவட்டமே தீவு போல தத்தளிக்கிறது. 2-வது நாளாக இன்றும் (டிசம்பர் 1) வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிலவரங்களின் Live Updates

பகல் 2.00 : புயலால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்துக்கு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கன்னியாகுமரிக்கு 28 நடமாடும் மருத்துவ குழுவை அனுப்பி தொற்று நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பகல் 1.00 : ஓகி புயலில் சிக்கி தத்தளித்த 38 மீனவர்களை இந்திய கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மீட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவித்திருக்கிறது.

12.45 மணி : சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘ஓகி புயல் லட்சத்தீவுக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரங்களில் லட்சத்தீவுகளை கடந்து செல்லும்.

தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும்’ என்றார்.

பகல் 12.30 : ஓகி புயல் மற்றும் கனமழைக்கு பலியான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்குவதாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பகல் 12.00 : நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தில் நேற்று மாலை முதல் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை விட்டு வெளியே வர முடியாத 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை படகுகள் மூலமாக அதிகாரிகளும் இளைஞர்களும் இணைந்து மீட்டனர்.

பகல் 11.45 : கன்னியாகுமரியில் மின் சீரமைப்புப் பணிகள் நாளைக்குள் (2-ம் தேதி) நிறைவுபெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஐஏஎஸ் தெரிவித்தார்.

பகல் 11.30 : ஓகி புயல் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பகல் 11.00 : கன்னியாகுமரியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை விட்டிருக்கிறார்.

காலை 10.30 : தென் மாவட்டங்களில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். தெற்கு கேரள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். தமிழக உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காலை 10.00: திருநெல்வேலி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் அபாய வளைவை தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசியதால் கடலில் படகுகள் கரை ஒதுங்கின. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

காலை 9.30 : பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலுக்குள் புகுந்த வெள்ளத்தை அப்புறப்படுத்துவதில் அதிகாரிகளும் பக்தர்களும் ஈடுபட்டனர். சுசீந்திரம் பழையாற்றில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காலை 9.00 : நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில தீயணைப்புப் படையினரும் மும்முரமாக இருக்கிறார்கள்.

காலை 8.30 : ஓகி புயல் கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து இன்று விலகிச் செல்லத் தொடங்கியது. மேலும் வலுப்பெற்ற புயல், தற்போது திருவனந்தபுரத்திற்கு மேற்கே 230 கி.மீ. தொலைவில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காலை 8.00 : திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும் காலை முதல் மழை பொழிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பிரதான பிரச்னை ஆகியிருக்கிறது. நாகர்கோவில்-காவல்கிணறு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், திருநெல்வேலி பஸ்கள் தென் தாமரைக்குளம் வழியாக கன்னியாகுமரி சென்று திருநெல்வேலிக்கு வருகின்றன.

 

 

 

 

 

Minister R B Udayakumar Kanyakumari District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment