‘ஓகி’ புயலில் சிக்கிய 2000 மீனவர்கள் கதி என்ன? நெல்லை, குமரிக்கு வெள்ளிக் கிழமையும் விடுமுறை

ஓகி புயலின் தாக்குதலால் கன்னியாகுமரி மாவட்டம் ஸ்தம்பித்தது. புயலில் 200 படகுகள் சிக்கியதால், அதில் பயணித்த மீனவர்கள் கதி என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

By: Updated: November 30, 2017, 10:06:13 PM

ஓகி புயலின் தாக்குதலால் கன்னியாகுமரி மாவட்டம் ஸ்தம்பித்தது. புயலில் 200 படகுகள் சிக்கியதால், அதில் பயணித்த மீனவர்கள் கதி என்ன? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ்நாடு, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொண்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இதனால் பரவலாக மழை பெய்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. கன்னியாகுமரி அருகே நிலைகொண்டுள்ள இந்த புயலுக்கு ‘ஒகி’ என பெயரிடப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் இந்தப் புயல் காரணமாக மணிக்கு 65 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இரவு 7.00 : கன்னியாகுமரி மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழுந்தது மற்றும் இடிபாடுகளில் சிக்கி மொத்தம் 4 பேர் பலியானார்கள்.

மாலை 06.30 : கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 1) விடுமுறை அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் டிசம்பர் 1-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாலை 5.15 : மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 65 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மாலை 5.10 : மழையால் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் கன்னியாகுமரி மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு வெளியிட்டார்.

மாலை 4.45 : நடுக்கடலில் சிக்கிய 200 படகுகளில் சுமார் 2000 மீனவர்கள் புயலில் தத்தளிப்பதாக கூறப்படுகிறது.  தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், ‘மீனவர்களை மீட்க முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.

மாலை 4.15 : நடுக்கடலில் புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க கடலோர காவல் படையின் உதவி கோரப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் அங்கு சென்று பணிகளை தொடங்குவார்கள் என்றும் மாநில நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஐ.ஏ.எஸ். தெரிவித்தார்.

மாலை 4.00 : கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் பெரும்பாலானோர் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழில் செய்பவர்கள். அதாவது 15 முதல் 20 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கியிருந்து மீன் பிடித்து திரும்புவார்கள். அப்படி மீன் பிடிக்கச் சென்ற சுமார் 200 படகுகள் இன்னும் திரும்பவில்லை. அவர்கள் ஓகி புயலில் சிக்கியிருக்கலாம் என மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

மாலை 3.00 : கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்து செல்போன் கோபுரங்கள் மீது விழுந்ததால், தொலைத்தொடர்பு முடங்கியது.

பகல் 2.00 : கன்னியாகுமரியில் சேதங்களை தடுக்கவும், மீட்புப் பணிகளை கவனிக்கவும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

பகல் 1.00: கன்னியாகுமரியில் மீட்புப் பணிகளை முடுக்கி விட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கன்னியாகுமரிக்கு விரைந்தார்.

பகல் 12.30 : குமரியில் காற்று காரணமாக பலத்த சேதம் அடைந்திருப்பதால், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த 70 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பகல் 12 மணி : குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முறிந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்.’ என்றார்.

காலை 10.30 : பலத்த மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் எச்சரிக்கை விடுத்தார்.

காலை 10.00 : கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் சென்னை-திருவனந்தபுரம் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளுக்கும் திருவனந்தபுரத்திற்கும் செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

காலை 9.30 : கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழைக்கு இடையே காற்றும் பலமாக வீசி வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலை 9.00: கன்னியாகுமரி அளவுக்கு இல்லாவிட்டாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

காலை 8 மணி : ஓகி புயலின் தாக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகம். நேற்று இரவு முதல் இங்கு பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

 

 

 

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cyclone ockhi heavy rain vast damages at kanyakumari

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X