Advertisment

தலித் பெண்களை பாதிக்கும் 4 ஆதிக்கங்கள் : ‘எவிடென்ஸ்’ கதிர் நேர்காணல்

தலித் பெண்கள் 4 ஆதிக்கங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார், எவிடென்ஸ் கதிர். அதிலிருந்து தப்பும் வழியும் சொல்கிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
தலித் பெண்களை பாதிக்கும் 4 ஆதிக்கங்கள் : ‘எவிடென்ஸ்’ கதிர் நேர்காணல்

கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, ஆணவக் கொலைகள் என அனைத்து வடிவங்களிலும், தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படும்போது அவர்கள் நொறுங்கி போகின்றனர். அவர்கள் தங்களுக்கான நீதியை பெறுவதற்கும், அதனை நோக்கிய பயணங்களுக்கும், நடைமுறைகளுக்கும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட அந்த நொடியிலிருந்து மனதளவில் துவங்க வேண்டும். சாதிய வன்கொடுமைகள் நிகழும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தொடர்பு கொள்ளும் நபர் ‘எவிடென்ஸ்’ கதிர். இவருக்கு அறிமுகம் தேவையிருக்காது. தலித்துகள் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும்போது, ’எவிடென்ஸ்’ குழுவுடன் சென்று அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவார், அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை.

Advertisment

தான் எழுதிய ‘சாதி தேசத்தின் சாம்பல் பறவை’ புத்தகத்தின் வெற்றி விழா மற்றும் தலித் எழுச்சி முன்னெடுப்பு விழாவுக்காக சென்னைக்கு வந்த ’எவிடென்ஸ்’ கதிரிடம், அவருடைய செயல்பாடுகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து பேசினோம்.

தாம் ஒடுக்கப்படுகிறோம் என்று நாம் அறிவதுதான் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கான முதல் படியாக இருக்க முடியும். அப்படித்தான் ‘எவிடென்ஸ்’ கதிரும் தான் சிறு வயதில் எதிர்கொண்ட சாதிய பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் பகிர்ந்துகொண்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள லால்பேட்டை எனும் சிறிய கிராமத்தில் தான் ‘எவிடென்ஸ்’ கதிர் பிறந்தார்.

”இந்தியா முழுவதும் வேரூன்றிக் கிடக்கும் சாதி கொடுமைகளுக்கு லால்பேட்டையும் தப்பிக்கவில்லை. நான் பிறந்தது மழைக்காலம். வீட்டுக்குள் மழை தண்ணீர் உள்ளே புகுந்ததால், விறகு கட்டைகளை அடுக்கி வைத்து அதன் மேல் சாக்கு துணியை பரப்பி அதில் தான் என் அம்மாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. நான் பிறந்த ஒன்றரை மாதங்களிலேயே எனக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது. இதனை நான் நோய் சார்ந்ததாக பார்க்கவில்லை. சாதி ரீதியாக ஒடுக்கும்போது மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகிறது. அதனால், நாங்கள் எளிதில் நோய்த்தாக்குதல்களுக்கு அதிகளவில் உள்ளாகிறோம்” என கூறினார் கதிர்.

2003-ஆம் ஆண்டில், தன்னை குறித்த ஆவணப்படம் ஒன்றிர்காக படக்குழுவினருடன் எவிடென்ஸ் கதிர் தன்னுடைய பிறந்த ஊரான லால்பேட்டைக்கு சென்றார். அப்போது வயதான ஒரு பாட்டி அவரை ஆரத்தழுவுகிறார். தன் உறவினரிடம் விசாரித்தபோது, அவர்தான் தன்னுடைய அம்மாவுக்கு பிரசவம் பார்த்தவர் என தெரிய வருகிறது. அவரிடம், “எங்க அம்மாவுக்கு ஏன் வீட்டிலேயே பிரசவம் பார்த்தீங்க? நீங்க அவ்வளவு பெரிய மருத்துவரா? நம்ம ஊரில் மருத்துவமனை இல்லையா?” என கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மருத்துவமனையில் தொடக்கூட மாட்டார்கள் என்பதால் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறியிருக்கிறார், அந்த பாட்டி.

“நமது பிறப்பே சாதியின் பெயராலான தீண்டாமையில் இருந்துதான் துவங்குகிறது” என்பது அன்றைய தினம் கதிருக்கு புரிந்தது.

சிறுவயதில் பள்ளிப்பருவத்தில் தான் எதிர்கொண்ட சாதிய அடக்குமுறைகளை நினைவு கூர்ந்தார் எவிடென்ஸ் கதிர். அவர் 8-வது வகுப்பு படிக்கும்போது, அவருடைய உறவு பெண் சாதி இந்துக்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார். அப்போது, ஊரில் கட்ட பஞ்சாயத்து நடத்தி, குற்றவாளிகள் இருவருக்கும் 80 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ”இந்த சம்பவம் என் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. இவ்வளவு பெரும் கொடுமைக்கு சிறிய தொகையை அபராதமாக செலுத்த சொல்லிவிட்டு குற்றவாளிகளை அப்படியே விட்டுவிடுவது எவ்வளவும் பெரும் அநீதி என்று எனக்கு தோன்றியது.”

பள்ளி, கல்லூரிகளில் எவ்வாறு சாதிய பாகுபாடுகள் இருக்கின்றன என்பதற்கான உதாரணத்தையும் தன் ஆசிரியர் மூலமே பெற்றிருக்கிறார். 9-வது வகுப்பு படிக்கும்போது அவரிடம் “உன் சாதி என்ன?”, என ஆசிரியர் கேட்டிருக்கிறார். வகுப்பில் சக மாணவர்கள் முன்பு கேட்கப்பட்ட அந்த கேள்வியால் கூனிக்குறுகியிருக்கிறார் கதிர். அதற்கு பதில் சொல்லாமல் நின்ற கதிரிடம், “இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லாததை பார்த்தால் நீ எஸ்.சி.தானே என்றிருக்கிறார்”, அந்த ஆசிரியர்.

அன்றைய தினம் இரவு ஏழு மணிவரை பள்ளியிலேயே இருந்திருக்கிறார். அழைத்துபோக வந்த தன் அப்பாவிடம் அழுதுகொண்டே, “உங்கள் வீட்டில் நான் ஏன் பிறந்தேன்?, என கேட்டிருக்கிறார். ”அப்போதுதான் யோசித்தபோது நம்முடைய அடையாளத்தை துணிந்து சொல்வதுதான் அடக்குமுறைகளுக்கு எதிரான முதல் குரல் என்பது எனக்கு புரிந்தது.” என கூறுகிறார் கதிர்.

கல்லூரி காலங்களில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், மால்கம் எக்ஸ் என அவரது வாசிப்பு விரிவடைந்ததாக கூறுகிறார். அதன்பின்பு, ’பீப்பிள்ஸ் வாட்ச்’ என்ற மனித உரிமை பாதுகாப்பு அமைப்பில் இணைந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழும்போது, சட்ட ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டார். விசாரணை மரணங்கள், கொத்தடிமை முறை, பாலியல் வன்கொடுமை இவற்றை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சட்டத்தின் துணைகொண்டு நீதியை பெற்றுத் தருவது என களத்திலிருந்து அறிந்தார்.

2001-ஆம் ஆண்டு டர்பைனில் ஐ.நா. சபை நடத்திய ’இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டை ஆவணப்படுத்தும் வாய்ப்பு கதிருக்கு கிடைத்தது. ’சாதியமும் இனவேறுபாடே’ என அம்பேத்கரின் பேரன் பிரகாஹ் அம்பேத்கர் சமர்ப்பித்த அறிக்கை தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிராக வாக்களித்தால் இந்தியா நட்புறவை துண்டித்துவிடுமோ என்ற அச்சத்தில், உலக நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன. இதன்பின், சாதிய கொடுமைகளை அனுதாபத்துடன் அணுகுவதைவிட ‘எவிடென்ஸ்’ மூலமாக அணுக வேண்டும் என முடிவெடுத்து, 2005-ஆம் ஆண்டு ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பை துவங்கினார்.

’எவிடென்ஸ்’ அமைப்பை துவங்கியவுடனேயே, கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளியின் மகன் ஒருவர், கதிரிடம் வந்து தன்னை படிக்க வைக்குமாறு கூறுகிறார். தன்னுடைய அம்மாவின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த 30,000 ரூபாயை அவரின் கல்லூரி படிப்புக்காக கொடுக்கிறார்.

’எவிடென்ஸ்’ அரசு சாரா நிறுவனம் என்பதால், ஆரம்பத்திலேயே நிதி ஆதாரம் சமாளிக்கக்கூடிய வகையில் கிடைத்தது. நிதி நெருக்கடியும் பல சமயங்களில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதிலிருந்தெல்லாம் மீண்டு பல வழக்குகளை நடத்தியிருக்கிறார்.

இந்த 12 ஆண்டுகளில் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினரின் சுமார் 2,000 வழக்குகளை ‘எவிடென்ஸ்’ அமைப்பு கையில் எடுத்து நடத்தியுள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்த தலித் சமூகத்தை சேர்ந்த நாகமுத்துவின் தற்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட வழக்கையும் ‘எவிடென்ஸ்’ அமைப்பே இறந்துபோனவரின் குடும்பத்திற்கு ஆதரவாக சுமார் 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களை ‘எவிடென்ஸ்’ அமைப்பு தேடி சென்ற காலம் போய், இப்போது பாதிக்கப்பட்டவர்களே ‘எவிடென்ஸ்’ அமைப்பை தேடி வரும் அளவுக்கு, சட்ட ரீதியாக சாதிய கொடுமைகளை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை திருத்த சட்டம் 2015-ன் படிவன்கொடுமை சட்டத்தின் கீழ், வன்கொடுமைகளை வழக்குகளாக காவல் துறையினர் பதியாமல் இருப்பது குற்றம். அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை தண்டனை கிடைக்கும். இதுபோன்ற விழிப்புணர்வையும் ‘எவிடென்ஸ்’ அமைப்பு தொடர்ந்து அளித்து வருகிறது.

“பாதிக்கப்பட்டவர்களை பார்த்தவுடனேயே நாமும் அவர்களுடன் கரைந்துவிட முடியாது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். செயலாற்ற வேண்டும். அரசாங்கம், காவல் துறை, நீதித்துறை எல்லாமே நிறுவனமயமாகி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை சொல்லிக்கொண்டே இருப்பதைவிட, அவர்களுக்கு ஆதரவாக கடைசி வரை தோள் கொடுக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுதல், அனுதாபப்படுதல் நிச்சயம் கடைசி வரை இருக்காது”, என களத்தில் நிற்பவர்களின் மன உறுதி எப்படி இருக்க வேண்டும் என வெளிப்படுத்துகிறார்.

சாதிய கொடுமைகளால் மிகவும் எளிதாகவும், பெரும்பான்மையாகவும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். ”அரசு, ஆதிக்க சாதி ஆண்கள், ஆதிக்க சாதி பெண்கள், தலித் ஆண்கள் என நான்கு விதமான ஆதிக்கத்திலும் தலித் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ அறிக்கைபடி, இந்தியாவில் நூறு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டால், அதில் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 5 வழக்குகள் கூட இல்லை. அவர்களுக்கான வளங்களை உறுதிபடுத்துதல், அரசியல் அதிகாரம் அளித்தல் இவைதான் தலித் பெண்களுக்கான விடுதலையை உறுதிசெய்யும்.” என்கிறார் கதிர்.

தலித்துகள் மற்றும் தலித் அமைப்புகளுக்கு இடையேயான பாகுபாடு, அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்களா என்ற கேள்விக்கு, “தலித் அமைப்புகளுக்குள் பாகுபாடு இருக்கிறது. அவர்களும் சாதியால் பிரிந்திருக்கிறார்கள். ஆனால், அந்த சாதி உணர்வைக் கடந்து நீதிக்காக ஒன்றாக நிற்க வேண்டும்.”, என்றார்.

அநீதி எங்கெல்லாம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் முதல் ஆளாக அதற்கெதிராக குரல் கொடுக்கும் ’எவிடென்ஸ்’ கதிர், இந்த ‘சாதி தேசத்தின் சாம்பல் பறவை’.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment