ஒரு மனிதன் எப்படி மிருகமாகிறான் என்பதற்கு தஷ்வந்த் ஒரு சிறந்த உதாரணம். இவனைப் பெற்ற போதும், 4 மாதங்களில் குப்புறப்படுத்த போதும், தத்தி தத்தி நடக்க முற்பட்டபோதும், அம்மா, அப்பா என்று முதன் முதலாய் அழைத்த போதும் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்கள் இவனது பெற்றோர்.. ஆனால், இன்று...?
ஒன்றுமே அறியாத சிறுமியை சீரழித்து எரித்துக் கொன்று, ஜெயிலில் இருந்து வெளிவந்து பெற்ற தாயையும் கொன்று, தற்போது தகப்பனையும் கொல்ல திட்டம் தீட்டி இருந்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறான் தஷ்வந்த்.
மும்பையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னை கொண்டுவரப்பட்ட தஷ்வந்திடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது அவன் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, "சிறுமியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த என்னை சொத்துக்களை விற்று பெற்றோர் ஜாமீனில் எடுத்தனர். வெளியே வந்த பின்னர் என்னிடம் அவர்கள் சரியாக பேசவில்லை. எப்போதும் திட்டிக்கொண்டு இருந்தனர். சாப்பாடு கூட போடமாட்டார்கள். புனே, பெங்களூர், மும்பை பகுதியில் உள்ள ரேஸ்கோர்சில் குதிரை பந்தயத்தில் ஈடுபட்டேன். இதற்காக எனக்கு அதிக அளவு பணம் தேவைப்பட்டது. அங்கு செல்லும் போது அழகியுடனும் உல்லாசமாக இருந்தேன். பணம் தேவை அதிகரித்ததால் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டேன். ஆனால் பணம் கொடுக்கமுடியாது என்று கூறினர்.
பணம் கொடுக்காத இரண்டு பேரையும் தீர்த்துக்கட்டி வீட்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். சனிக்கிழமையன்று அம்மா மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் பணம் கேட்டபோது கொடுக்க மறுத்தார். வேலைக்கு போகச்சொல்லி திட்டினார்.
அப்போது கோபத்தில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அம்மாவின் தலையில் அடித்தேன். அவர் மயங்கி விழ, அதை பொருட்படுத்தாமல் நான் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிந்தது. அப்பாவையும் கொன்று விடலாம் என்று முதலில் முடிவு செய்தேன். ஆனால் அவர் வேலைக்கு சென்றுவிட்டதால் திட்டத்தை மாற்றினேன்.
அம்மாவின் 25 பவுன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். ஜெயிலில் இருந்த போது நண்பர்களாக பழகிய சிட்லபாக்கத்தை சேர்ந்த டேவிட், ஜேம்ஸ் ஆகியோருடன் சென்று நகையை விற்றுத் தருமாறு செங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் நகையுடன் தலைமறைவாகி விட்டார்.
இதனால் டேவிட், எனக்கு ரூ. 40 ஆயிரம் கொடுத்தான். அந்த பணத்துடன் முதலில் பெங்களூரு சென்றேன். பின்னர் அங்கிருந்து பஸ் மூலமே மும்பைக்கு போனேன். ஏற்கனவே அங்கு பழக்கமாகி இருந்த விபச்சார அழகியுடன் தங்கி ரேஸ்கோர்சில் பந்தயம் கட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேன்.
மும்பை வந்த தனிப்படை போலீசார் என்னை கைது செய்தனர். சென்னைக்கு கொண்டு செல்வதற்காக விமான நிலையம் வந்த போது, சாப்பிடும் போது எனது ஒரு கையில் இருந்த கைவிலங்கை கழற்றிவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த நான் ஓட்டலில் இருந்து தப்பி ஓடினேன். அங்கிருந்து சென்ற நான் கைவிலங்கு தெரியாதவாறு துணியை சுற்றிக் கொண்டு சலூன் கடைக்கு போய் ஷேவ் செய்தேன். ஹேர் ஸ்டைலை மாற்றினேன்.
அருகே உள்ள ஓட்டலில் வேலை கேட்டேன். அப்போது வாட்ஸ்-அப்பில் பரவிய படத்தை வைத்து யாரோ போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனை வைத்து போலீசார் மீண்டும் என்னை கைது செய்துவிட்டனர்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
குழந்தைகள் தெய்வங்கள் தான்... ஆனால், அதே குழந்தைகள் மிருகமாக மாற்றபடுவது யாரால்?