Advertisment

ஆயிரம் ரூபா கொடுத்தாதான் இறப்புச்சான்றிதழ்; அடாவடி செய்த அரசு மருத்துவர்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் இறப்பு சான்றிதழ் கேட்டு சென்றவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் கொடுக்க முடியும் என அடாவடி வசூலில் ஈடுபட்ட சம்பவம் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
ssa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் இறப்பு சான்றிதழ் கேட்டு சென்றவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் கொடுக்க முடியும் என அடாவடி வசூலில் ஈடுபட்ட சம்பவம் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

தொட்டியம் அருகே மேய்க்கல் நாயக்கன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நோயாளிகள் உடல்நல குறைபாட்டுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். அப்பகுதியில் யாரேனும் இயற்கை மரணம் அடைந்து விட்டால் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவரின் சான்றிதழுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவரை அணுகுவர்.

அந்தவகையில், நேற்று மேய்க்கல் நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரது உறவினர்கள் பணியில் இருந்த அரசு மருத்துவர் ராமச்சந்திரனை அணுகி இறந்து போனவரின் இறப்புக்கு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு அரசு மருத்துவர் ராமச்சந்திரன் இறந்தவர் எப்படி இறந்தார், நோயற்ற மனிதர் 90 வயது வரை உயிர் வாழ முடியும் அவரின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என விசாரித்துவிட்டு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே இறப்பு சான்றிதழ் வழங்க முடியும் என்றும், நான் இங்கு சான்றிதழ் வழங்குவதற்காக மட்டும் பணியாற்றவில்லை. அது எனது வேலை இல்லை, நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள்ளுங்கள் என கறாராக அதிரடி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

 பணம் தராவிட்டால் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் மரணம் இயற்கையானது என்று எழுதி வாங்கி வாருங்கள் அல்லது இறந்தவரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தால் மட்டுமே நான் இறப்புச் சான்றிதழ் வழங்க முடியும் எனவும் அதட்டல் தொனியில் அரசு மருத்துவர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இறப்பு சான்றிதழ் கேட்டு சென்றவர் உடன் சென்ற உறவினர் ஒருவர் டாக்டர் ராமச்சந்திரன் சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதை செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

 இறப்பு சான்றிதழ் வழங்க அரசு மருத்துவர் பணம் கேட்டு அடாவடியாக பேசியது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மீது மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment