தாது மணல் கொள்ளை: முதலமைச்சரின் முடிவு என்ன?

தாது மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அரசு உரிய முடிவெடுக்கும் எனவும், தாது மணல் கொள்ளை குறித்து கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “2013-2014-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், தாது மணல் கொள்ளை தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி-ஆல் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அவ்வாறு அறிக்கை சமர்ப்பித்து நான்கு ஆண்டுகள் ஆகியும் ஏன் தாது மணல் கொள்ளை குறித்து கொள்கை முடிவு எடுக்கவில்லை?”, என கேள்வி எழுப்பினார்.

அப்போது, மு.க.ஸ்டாலினின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆலோசகரும் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதுகுறித்து செப்டம்பர் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட நிலையிலும், சட்டத்திற்கு புறம்பாக தாது மணல் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, திருநெல்வேலி, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களிலும் அதுகுறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.”, என்று கூறினார்.

மேலும், இதுகுறித்த பொதுநல மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த குழுவில், சுங்க வரித்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகள் இடம்பெற்றதாகவும் முதலைமைச்சர் குறிப்பிட்டார்.

தாது மணல் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின், அகமதாபாத்தில் உள்ள பாஸ்கராச்சார்யா புவியியல் தொழில்நுடம் கல்வி நிறுவனம் துணையுடன் மணல் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ள தென் மாவட்டங்களில், தொழில்நுட்ப ரீதியில் கண்காணிப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், தடைக்குப் பிறகும் தாது மணல் கொள்ளை நடைபெறுவதாக நீதிமன்றம் கூறினால், பறக்கும் படைகள் அமைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

×Close
×Close