Advertisment

அழிவின் விளிம்பில் இருக்கும் பாண்டிச்சேரி வல்லூறுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கடந்த 10 ஆண்டுகளாக செந்தலைக் கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்களால் கூட அதன் கூடுகள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய இயலவில்லை

author-image
Nithya Pandian
New Update
Decline and conservation of Asian King Vulture in Sigur Plateau of Nilgiris

Decline and conservation of Asian King Vulture in Sigur Plateau of Nilgiris : பாண்டிச்சேரி வல்லூறு என்று பரவலாக வழங்கப்பட்டு வந்த செந்தலைக் கழுகுகள் இப்போது எங்கே சென்றன? இந்தியாவில் மட்டுமே ஒரு காலத்தில் அதிக அளவில் காணப்பட்ட இந்த வல்லூறுகளின் இன்றைய எண்ணிக்கை தெரியுமா? இந்தியா முழுவதும் 50 ஆண்டுகளுக்கு முன்பாக சர்வ சாதாரணமாக சுற்றித் திரிந்த இந்த வல்லூறுகளின் இன்றைய நிலையை விவரிக்கிறது இந்த கட்டுரை.

Advertisment

நீலகிரி வன உயிரினங்கள் மற்றும் சூழலியல் தொடர்பாக பல்வேறு முக்கிய முன்னெடுப்புகளை வைக்கும் வழக்கறிஞர் சந்தானராமனின் சீகூர் பள்ளத்தாக்கு பயணம், இந்த செந்தலைக் கழுகுகள் குறித்த ஓர் நம்பிக்கையை விளைவித்துள்ளது. கடந்த மாதம் அங்கு சென்ற அவர், ஒரு இணை செந்தலைக் கழுகுகள் அதன் குஞ்சுடன் அங்கு இருந்ததை புகைப்படமாக எடுத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் பேசிய போது பல்வேறு முக்கிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

Decline and conservation of Asian King Vulture in Sigur Plateau of Nilgiris

Picture Courtesy : சீகூர் பள்ளத்தாக்கில் வழக்கறிஞர் சந்தான ராமன் எடுத்த புகைப்படம்

மனிதனின் சஞ்சாரத்திற்கு உட்படாமல் வாழும் உயிரினம் இது... இந்த புகைப்படத்தை நான் இங்கே தான் எடுத்தேன் என்ற தகவல்களை மட்டும் தராதீர்கள். நாளையே 400-500 நபர்கள் கையில் கேமராவுடன் சீகூரில் இருக்கும் அந்த பகுதிக்கு சென்றுவிடுவார்கள்” என்கிறார் சந்தானாராமன்.

முன்பு தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்த இந்த வல்லூறுகளின் தற்போதைய புகலிடமாக இருப்பது நீலகிரி மலைகளின் வடக்கு பகுதியில் 500 சதுர கி.மீ பரப்பளவில் பரவி இருக்கும் சீகூர் பீடபூமியும் மாயாறு பள்ளத்தாக்கும் தான். பிணந்திண்ணி கழுகுகள் என்று கூறப்படும் இந்த வல்லூறுகளில் மிக முக்கியமானது இந்த செந்தலை கழுகுகள். புலிகள் போன்ற ஊன் உண்ணிகளை பின் தொடர்ந்து செல்லும் இந்த வல்லூறுகள், ஊன் உண்ணிகள் வேட்டையை முடித்த பின்பு விட்டுச் செல்லும் மிகவும் ”ஃப்ரெஷான” இறைச்சியை உண்ணும் பழக்கம் கொண்டது.  இறந்து போன வன உயிரினங்கள் அல்லது கால்நடைகளின் கடினமான தோலை தன்னுடைய அலகால் குத்தி கீறிடும் வகையில் மிகவும் வலுவான, முதன்மையான வல்லூறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்து போன விலங்குகளால் பரவும் ஆந்த்ராக்ஸ், ரேபீஸ் போன்ற நோய்களின் பரவலை கட்டுப்படுத்தும் மிக முக்கிய காரணமாக ஒரு காலத்தில் இருந்தது இந்த தூய்மைப் பறவைகள். இன்று இதன் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 10 முதல் 15 மட்டும் தான்.

கடைசி புகலிடமாக இருக்கும் மாயாறு பள்ளத்தாக்கும், சீகூர் பீடபூமியும்

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் (Nilgiri Biosphere Reserve) மையத்தில் நீலகிரி வடக்கு வன கோட்டம் அமைந்துள்ளது. நீலகிரி வடகிழக்கு பகுதியில் தான் மாயாறும் சீகூர் பள்ளத்தாக்கும் அமைந்துள்ளது. வடக்கு வன கோட்டத்திற்கு மேற்கு பகுதியில் முதுமலை புலிகள் காப்பகமும், கிழக்கு பகுதியில் சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயமும் அமைந்துள்ளது. இந்த பகுதி, இதன் தட்பவெட்ப நிலை மற்றும் உணவு ஆதாரங்கள் நான்கு வகையான வல்லூறுகளுக்கு உறைவிடமாக அமைந்துள்ளது.

இந்திய பாறு கழுகுகள் Indian vulture/ long billed vulture (Gyps Indicus), வெண்முதுகு பாறு கழுகுகள் - White rumped vulture (Gyps Bengalensis), செங்கழுகு / செங்கழுத்து கழுகுகள் / செந்தலைக் கழுகுகள் / செம்முக கழுகு - Red headed Vulture / Asian King Vulture (Sarcogyps Calvus),  மஞ்சள் பாறு / மஞ்சள் முகப்பாறு Egyptian vulutre (Neophron Percnopterus) என நான்கு வகையான வல்லூறுகளை மாயாறு பள்ளத்தாக்கு மற்றும் சீகூர் பீடபூமியில் காண இயலும். 1930 வரையில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட வெண்முதுகு பாறு கழுகுகள் மற்றும் செந்தலைக் கழுகுகள் இன்று வயநாடு சரணாலயத்தை தவிர வேறெங்கும் காண இயல்வதில்லை. தென்னிந்தியாவில் மொத்தமாகவே இருக்கும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 200 முதல் 250 என்பது மேலும் கவலைக்குரியது.

சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் (International Union for Conservation of Nature) அழிந்து வரும் உயிரினங்களில் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது இந்த செந்தலைக் கழுகுகள்.

கோவையை நோக்கி நகருகிறதா செந்தலைக் கழுகுகள்?

கோவை பேரூரை அடுத்து அமைந்திருக்கும் தீத்திபாளையம் பகுதியில் சமீபத்தில் இந்த செந்தலைக் கழுகுகளை பார்க்க முடிந்துள்ளது. தன்னுடைய இருப்பிடத்தை விட்டு பெரிதும் வெளியேற விரும்பாத இக்கழுகுகள் ஏன் நீலகிரி மலைத்தொடர்களில் இருந்து கோவையை நோக்கி நகர்ந்துள்ளன என்ற கேள்விகள் எழுந்துள்ளது. போதுவான உணவும் உறைவிடமும் பாதுகாப்பான சூழலும் இல்லாத காரணத்தினால் கூட இந்த பறவைகள் இடம் பெயரலாம்.  நீர் மத்தி (நீர் மருது மரங்கள்) அதிகம் இருக்கும் பகுதியில் இந்த பறவைகள் வாழ்விடத்தை தேர்வு செய்வது வழக்கம். சிறுவாணி மலைப்பகுதிகளில் அதிக அளவு இவ்வகை மரங்கள் இருப்பதால் இந்த பறவைகள் இங்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும் கருத்துகள் முன் வைக்கப்படுகிறது.

செந்தலை கழுகுகளின் அழிவிற்கு காரணம் என்ன?

செந்தலை கழுகுகள் மட்டுமின்றி அநேக பாறு கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. வட இந்தியாவில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் டைக்ளோஃபினாக் என்ற வலி நிவாரணி மருந்து, கால்நடைகள் மறைந்த பின்பும் அதன் உடலில் என்றும் இருக்கும். அனைத்து வகையான நோய் கிருமிகளையும் ஜீரணித்து ஒன்றுமில்லாமல் ஆக்கும் இந்த வகை கழுகுகளின் சிறுநீரகத்தில் டைக்ளோஃபினாக் மருந்து நஞ்சாக, உயிர்கொல்லியாக தேங்கி இந்த பாறு கழுகுகளின் அழிவிற்கு வழி வகுத்தது” என்கிறார் அருளகம் அமைப்பின் பாரதிதாசன்.

தென் இந்தியாவில் இதன் நிலை என்ன? டைக்ளோஃபினாக் (Diclofenac) மட்டுமே காரணமா என்று உதகை அரசு கலைக்கல்லூரி விலங்கியல் பேராசிரியர் ராமகிருஷ்ணனிடம் பேசியது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

”பொதுவாகவே நம் மக்கள் மாட்டினை இறைச்சியாக உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். பெரும்பாலானோர் இல்லாவிடிலும் நம் சமூகத்தில் மாட்டிறைச்சி முக்கிய உணவாகவே இருக்கிறது. ஒரு வேளை மாடுகளுக்கு மிகவும் முடியாமல் போகும் பட்சத்தில், நம் மக்கள் கை வைத்தியம் மேற்கொள்கின்றனர். அதிலும் தோல்வி அடையும் கேரளத்திற்கு அடி மாடாக அனுப்படுகிறது.

publive-image தற்போது செந்தலைக் கழுகுகளின் எண்ணிக்கையில் புதிதாக இணைந்திருக்கும் குஞ்சு (PC : Dr. Jean-Philippe Puyravaud )

வட இந்தியாவை போன்று இங்கு மாடுகள் இறை தொன்மமாக பார்க்கப்படுவதில்லை என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். மடி வீக்கம் மட்டுமில்லாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர்கள் கால்நடை மருத்துவர்களையும் இம்மருந்துகளையும் அணுகியதன் விளைவு தான் பாறு கழுகுகளின் அழிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

டைக்ளோஃபெனாக்(Diclofenac) தவிர ஃப்லுனிக்சின் (Flunixin), கார்ப்ரோஃபென் (Carprofen), பெனைல்பூடாஜோன் (Phenylbutazone) மற்றும் ஐபுப்ரோஃபென்(ibuprofen) போன்ற கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் தாக்கமும் பாறு கழுகளின் மறைவிற்கு காரணமாக அமைந்தது.

ஆனால் அதனை தென்னிந்தியாவோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தேவை இல்லை. ஓரளவிற்கு உண்மை என்றாலும் தென்னிந்தியாவில் இந்த பாறு கழுகுகள் அழிய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 70 மற்றும் 80 தொடக்கங்களில் வேட்டையாட ஊருக்குள் புகும் புலிகள் போன்ற வன விலங்குகளை வஞ்சம் தீர்க்க, கால்நடைகளுக்கு விஷம் தடுவதல் மிக முக்கியமான ஒன்றாகும். அவர்களின் இலக்கு என்னவோ புலியாகவோ /சிறுத்தையாகவோ இருப்பினும் இதில் அதிகம் பாதிப்பிற்கு ஆளானது பாறு கழுகுகள் தான்.

அதே போன்று பாறு கழுகுகள் பெரும்பாலும் வன விலங்குகளின் இறந்த உடல்களையே அதிகம் சார்ந்து இருக்கிறது (90% வன விலங்குகளின் இறந்த உடல்களையும், 10% கால்நடைகளின் இறந்த உடல்களையும் சார்ந்து இருக்கிறது) என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது என்கிறார் ராமக்கிருஷ்ணன்.

ஆரம்பத்தில் வனத்துறையினர் இறந்த கால்நடைகளின் உடலை புதைக்க கோரியதும் கூட ஒரு வகையில், பாறு கழுகுகளுக்கு உணவு தட்டுப்பாட்டினை உருவாக்கியது என்கிறார் பாரதிதாசன்.

நீர் பறவை - பாறு கழுகுகள்

செந்தலை கழுகுகள் மட்டுமின்றி இதர பாறு கழுகுகளும் முதன்மை உணவாக இறைச்சியையே எடுத்துக் கொள்கிறது. அதிக அளவில் இறைச்சியை எடுத்துக் கொள்ளும் போது அதற்கு குடிக்க அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. வறட்சியான சூழலும், நீலகிரியில் சில ஆண்டுகள் தவறிய பருவமழை காரணமாகவும் மாயாறின் கிளை நதிகள் எல்லாம் வறண்டுவிட்டன. இதன் காரணமாகவும் இவற்றின் எண்ணிக்கை குறைய துவங்கியது.

வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடும் செந்தலைக் கழுகுகள்

”முந்தைய காலங்களில் இதனை நாங்கள் பாண்டிச்சேரி வல்லூறுகள் என்றே கூறுவோம். சீகூரில் மட்டும் இல்லாமல், சென்னை, பழநிமலை குன்றுகள், தாம்பரம், பாண்டிச்சேரி என்று பல்வேறு பகுதிகளிலும் சுற்றித்திரிந்த உயிரினங்கள் தான் இவை.  செந்தலைக் கழுகுகள், ஒரு ஆண்டுக்கான போதுமான உணவு இருக்கும் பட்சத்தில் தான் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. போதுமான உணவு இல்லாத பட்சத்தில் அந்த சுழற்சியை மாற்றிக் கொள்கிறது. ஒரு முடை மட்டுமே இடும் என்பதால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றமும் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது” என்கிறார் அருளகம் அமைப்பின் செயலாளர் பாரதி தாசன்.

Decline and conservation of Asian King Vulture in Sigur Plateau of Nilgiris PC : Santhana Raman

தொடர்ந்து வன ஆக்கிரமிப்பும், மனிதர்கள் நடமாட்டமும் இருக்கின்ற காரணத்தால், தொந்தரவுக்கு ஆளாகும் இக்கழுகுகள் தங்களின் எல்லைகளை மேலும் மேலும் சுருக்கிக் கொண்டு மனிதர்கள் நடமாட இயலாத காடுகளுக்குள் சென்றுவிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக செந்தலைக் கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்களால் கூட அதன் கூடுகள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்முதுகு பாறுக் கழுகுகள், நீர் மருது (Terminalia Arjuna)  போன்ற 40 அடிக்கும் அதிகமாக வளரும் மரங்களில் முட்டையிடுகின்றன. குஞ்சுகள் பறக்க தங்களை சோதிக்கும் முயற்சியில் மேலே இருந்து விழுந்து இறக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

பொதுவாகவே பாறு கழுகளின் எச்சம், அது உட்கொள்ளும் உணவின் காரணமாக மிகவும் வீரியமாக இருக்கும். அப்பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டும் பட்சத்தில் அவை மிக விரைவில் பட்டுப் போய்விடும் என்பதால் இப்பறவைகள் கூடு கட்டுவதை விவசாயிகள் யாரும் அப்பகுதியில் விரும்புவதில்லை. எனவே அப்பறவைகளை அதிகம் முடுக்கிவிடும் நிலையே ஏற்படுகிறது என்றும் பாரதி தாசன் குறிப்பிட்டுள்ளார்.

பாறு கழுகுகளை பாதுகாக்க வனத்துறை மேற்கொண்ட முடிவு

விளிம்பு நிலையில் இருக்கும் பாறு கழுகுகளின் எண்ணிக்கையை உயர்த்த வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாயாற்றங்கரையின் இரு பகுதிகளிலும் கடந்த மாதம் 150க்கும் மேற்பட்ட நீர் மருது மரங்கள் வைக்கப்பட்டது.  முதுமலை புலிகள் காப்பகமும் ஆக்கபூர்வ முயற்சியாகத் தென்னிந்தியாவின் முதல் கழுகுகளின் இனப்பெருக்க மையத்தை நிறுவ களமிறங்கியுள்ளது.

தண்ணீர் தான் இன்றியமையாத தேவை. கேதர்ஹல்லா போன்ற முக்கியமான ஆறுகள் வற்றிவிட்ட சூழலில் முதுமலையில் வனச்சரக அதிகாரியாக பணியாற்றிய செல்வம், வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் தண்ணீர் கொண்டு வரும் பணியை மேற்கொண்டார். வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து போர்வெல் மூலமாக 2 கி.மீ தொலைவிற்கு பைப்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது. புலிகள், செந்நாய், யானைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் இந்த குட்டையில் தண்ணீர் அருந்த வந்துள்ளது.  விலங்குகளை தொடர்ந்து பாறு கழுகுகளும் தற்போது அந்த குட்டையில் நீர் அருந்த வருவதை அங்கு வைத்திருக்கும் கேமரா ட்ராப்கள் மூலம் கண்டறிந்துள்ளனர் வனத்துறையினர்.

பொம்மலாட்டமும் - மக்கள் பணியும்

”ஊன் உண்ணிகளை கொல்வதற்காக விஷம்  தடுவும் பழக்கத்தை முற்றும் அழிக்க பல்வேறு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொம்மலாட்டம் மூலம் கதை கூறும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்த்தப்பட்டன.  வனவிலங்குகளால் உயிரிழக்கும் மாடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தியது விஷம் வைக்கும் முடிவிற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.  தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய, வறண்ட காலங்களில் காமராஜர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்ட பறவைகள் உள்ளிட்ட அனைத்து வன உயிரினங்களின் நீர் தேவையும் தீர்க்கப்பட்டது” என்கிறார் பாரதிதாசன்.

ஆனாலும் தப்பி தவறி செல்லும் பாறு கழுகுகளின் குஞ்சுகளை அடைத்து வைப்பதில் அவருக்கும், ராமகிருஷ்ணனுக்கும் அதிகம் உடன்பாடு இல்லை. வனத்தில் வாழும் பறவைகளின் தகவமைப்பை அது மாற்றும் விதமாக மாறிவிடுகிறது. பறவை பறக்கத்தான் வேண்டுமே தவிர கூண்டில் வாழ்வை கழிக்க கூடாது என்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nilgiris Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment