மது-பிரியாணி மூலமாக சசிகலா அணியினர் ஆள் பிடிக்கின்றனர்... தீபா பேரவை குற்றச்சாட்டு

கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு ரூ.500 மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகம்.

சசிகலா அணி பிள்ளைப் பிடிக்கும் பூச்சாண்டியைப் போல அமைச்சர்கள் முதல் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என தீபா பேரவை குற்றம்சாட்டியுள்ளது.
 
இது தொடர்பாக எம்ஜிஆர்  அம்மா தீபா பேரவையின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் பசும்பொண் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள், சசிகலாவின் பினாமி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இணைந்ததாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி முற்றிலும்  தவறானது.
அந்த அணியில் இணைந்தவர்களுக்கும், எங்கள் அமைப்புக்கும் துளி அளவுக்கூட தொடர்பில்லை.
 
மாநில,மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் இணைந்ததாக கூறுவது இமாலய பொய்யாகும். மாறாக சசிகலா அணி பிள்ளைப் பிடிக்கும் பூச்சாண்டியைப் போல, அமைச்சர்கள் முதல் ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
 
மதுரையில் இளைஞர்கள் விழா என்ற பெயரில் பினாமி முதல்வர் எடப்பாடி கலந்துக்கொள்ளும் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு ரூ.500 மற்றும் பிரியாணி மதுபாட்டில்கள் விநியோகம் செய்து அரசு பஸ்களை இலவசமாக இயக்கி வருகிறார்கள்.
 
மதுரையில் குடிநீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. தென் தமிழகத்தில் கலாச்சாரத் திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும் இத்தருணத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சசிகலா அணியினர் விழா நடத்துவதை பொதுமக்கள் விரும்பவில்லை. மாறாக கண்டிக்கிறார்கள்.
 
திருவிழா நடைபெறுவதற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட முடியாத  எடப்பாடி அரசை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், எங்கள் பேரவையை சேராதவர்ககளை, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையோடு இணைத்து தொடர்ந்து செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close