ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவர் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் ரத்த உறவு என்ற முறையில் அவரது சொத்துக்கான வாரிசாகவும் இருக்கிறார். இவரது தம்பி தீபக் சசிகாலா ஆதரவாளராக இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனுக்கு தீபக் அழைத்ததன் பேரில் சென்றார். அங்கு ஜெயலலிதாவுக்கு பூஜை செய்ய தீபக் அழைத்துள்ளார். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தீபா போயஸ் கார்டன் வீட்டை விட்டு துரத்தப்பட்டார்.
அப்போது பேட்டியளித்த அவர், ‘போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கு நானே வாரிசு. அதற்கான டாக்குமெண்டுகள் என்னிடம் இருக்கிறது. இது தெரிந்துதான் என்னக்கு மிரட்டல் வருகிறது. போயஸ் கார்டன் வீட்டை மீட்க சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பேன் என்று ஆவேசமாக சொன்னார்.
அப்படி சொன்னதோடு அவர் நின்றுவிடவில்லை. சென்னை ஐகோர்ட், சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘போயஸ் தோட்டம் வேதா நிலையம் தொடர்பாக யார் வழக்குத் தொடர்ந்தாலும் என்னுடைய கருத்தைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தீபக், அல்லது சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் வழக்குத் தொடர்ந்து ஸ்டே வாங்கிவிடக் கூடாது என்பதற்காக முதல் கட்டமாக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இது 90 நாட்கள் வரையில் செல்லுபடியாகும். அதற்குள் போயஸ் தோட்டத்து வீட்டை மீட்க வழக்குத் தொடர்வார் என்று தீபாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் சொத்துக்காகதான் தீபா அரசியலுக்கு வந்தார் என்ற விமர்சனம் வரும் என்பதாலேயே இதுவரை அமைதியாக தீபா இருந்தார். இனி அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் சொல்கிறார்கள். அதோடு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.