மழை, வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது, மக்கள் எளிதில் அணுகி தங்கள் இடர்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள நாடுபவர்கள் யாரென்றால், அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள். ஆனால், தமிழகத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை. அதனாலும், சென்னை உட்பட தமிழகத்தில் மழை பாதிப்புகளை களைய அதிகாரிகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள், ஒன்றிய அமைப்புகள், மாவட்ட பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது.
ஆனால், அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி பூசலால், மாநில அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பா என்ற சந்தேகமும் எழுகிறது. இதுதொடர்பான வழக்கில், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மூன்று முறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடைசியாக, நவம்பர் 19-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பாதிக்கப்படுவது மக்களே. டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகளையும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், மக்கள் அதிகாரிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, மழை பாதிப்புகளுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
மழை பாதிப்புகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், நிவாரண பணிகளில் ஏற்படக்கூடிய மெத்தனப்போக்கு, குறைபாடுகள் குறித்து ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். அப்போது, அவர் பேசியதாவது,
“நீர்நிலைகள் பராமரிப்பு, தூர்வாருதல், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் தான் உள்ளது. பஞ்சாயத்து தலைவர், நகராட்சி, வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மக்கள் எளிதில் அணுகக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள், மக்களிடம் நமக்கு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவாவது, மக்கள் நல பணிகளில் ஈடுபடுவார்கள்.
இப்போது, மக்கள் பிரதிநிதிகளே இல்லை என்ற நிலையில், அதிகாரிகள்தான் ஆட்சி செய்கின்றனர். மக்களாட்சி நடைபெறவில்லை. சில அதிகாரிகள் வரக்கூடிய புகார்களை கவனிப்பார்கள். சிலர் மெத்தனமாக இருப்பார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்களிடையே தொடர்பின்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால், இவ்வளவு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்.”, என கூறினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என பலமுறை உத்தரவுகள் பிறப்பித்தும், மாநில அரசு அதனை நடத்தாமல் இருப்பது ஜனநாயக விரோதப்போக்கு எனவும் அவர் கூறினார்.