உலக நாயகன் கமல்ஹாசனை சந்திக்க சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார்.
அரசியல் ஆயுதமாக தனது டுவிட்டரை உபயோகித்து வந்த கமல்ஹாசன், நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டையை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என தெரிவித்ததையடுத்து, கூடிய விரைவில் அவர் அரசியல் களம் காண்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உலக நாயகன் கமல்ஹாசனை சந்திக்க சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், அங்கிருந்து கமல்ஹாசன் இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டைக்கு சென்றார். அங்கு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின் போது, ஆம் ஆத்மி கட்சியில் சேர கமல்ஹாசனுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.
அதேசமயம், எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனி கட்சிதான் தொடங்குவேன் என்றும் கமல் தெளிவு படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த 2015-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது, டெல்லியில் நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காக கெஜ்ரிவாலுக்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.
அரசியலில் நான் இப்போது பயிலும் காலத்தில் இருக்கிறேன். அரசியலில் ஈடுபடுவது குறித்து பினராயி விஜயன் மட்டுமல்ல வேறு சில தலைவர்களிடமும் ஆலோசனைகளை பெறுவேன் என கேரள முதல்வர் பினராயி விஜயனை அண்மையில் சந்தித்த கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.