டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உலக நாயகன் கமல்ஹாசனை சென்னையில் இன்று சந்தித்து பேசவுள்ளார்.
தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பிலும் தமிழக அரசுக்கு எதிரான அவரது கருத்து எதிரொலித்தது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என கமல்ஹாசன் அப்போது குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கமல்ஹாசன் மற்றும் தமிழக அரசுக்கு இடையேயான வார்த்தை போர் முற்றியது. விளம்பரத்துக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கமல் முன்வைக்கிறார் எனவும், வருமான வரி சோதனை என மிரட்டல் தொனியில் அமைச்சர்கள் பேசி வந்தாலும், எதற்கும் அஞ்சாமல் தனது விமர்சன அம்புகளை தமிழக அரசு மீது தொடர்ந்து கமல்ஹாசன் எய்து வருகிறார். இவருக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தனது அரசியல் ஆயுதமாக டுவிட்டரை உபயோகித்து வந்த கமல்ஹாசன், நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டையை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என தெரிவித்ததையடுத்து, கூடிய விரைவில் அவர் அரசியல் களம் காண்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல்ஹாசன் அண்மையில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "பினராயி விஜயனுடனான சந்திப்பில் அரசியல் நோக்கம் இருக்கலாம். அரசியலில் நான் இப்போது பயிலும் காலத்தில் இருக்கிறேன். அந்த வகையில் அவரிடம் ஆலோசனையும் பெற்றுள்ளேன். தலைவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவர்களுடனான சந்திப்பு நன்மை பயக்கும். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. அவரது கருத்துகள், திட்டங்கள், பணிகள் மக்கள் நலனை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அரசியலில் ஈடுபடுவது குறித்து பினராயி விஜயன் மட்டுமல்ல வேறு சில தலைவர்களிடமும் ஆலோசனைகளை பெறுவேன் என்றார்.
அதேசமயம், எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனி கட்சிதான் தொடங்குவேன் என்றும் கமல் தெளிவு படுத்தியுள்ளார்.
இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உலக நாயகன் கமல்ஹாசனை சென்னையில் இன்று சந்தித்து பேசவுள்ளார். முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது, டெல்லியில் நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காக கெஜ்ரிவாலுக்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.
கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மாநிலத்தின் ஆட்சியை பிடித்து சாதனை செய்தவர் என்ற பெருமை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உண்டு. காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகளை தோற்கடித்து ஆட்சியை பிடித்ததை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே ஆச்சரியமாக பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.