தினகரனை கைது செய்தது போலீஸ்.... முடிவுக்கு வந்த ஆட்டம்!

சுகேஷிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருவரின் உரையாடல் குறித்த சிடி ஒன்றையும் போலீசார் போட்டுக் காட்டிய பின், வேறுவழியின்றி சுகேஷ் சந்திரசேகரை தெரியும் என தினகரன் ஒப்புக் கொண்டார்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, சந்திரசேகரை எனக்கு தெரியும் என தினகரன் ஒப்புக் கொண்டதால், அவரையும் அவரது கூட்டாளியான மல்லிகார்ஜுனா என்பவரையும் டெல்லி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

முன்னதாக, அஇஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா – முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆகிய இரு தரப்பின் உட்கட்சி மோதலால், அஇஅதிமுக சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது. அதேபோல், கட்சியின் பெயரையும் பயன்படுத்த தடை செய்தது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் ரூ.50 கோடிக்கு பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுகேஷ் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்போது இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டு, அவரிடம்   இருந்து ரூ.1.3 கோடி பணமும், இரண்டு விலையுயர்ந்த சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டது. அவரது கொச்சி வீட்டிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கடந்த ஐந்து நாட்களாக தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தினகரன் மட்டுமல்லாது அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும், தினகரன் உதவியாளர் ஜனார்த்தனனுடனும் போலீசார் குறுக்கு விசாரணை நடத்தினார்.

முதலில் ‘நான் சுகேஷ் சந்திரசேகரை பார்த்தது கூட இல்லை’ என மறுத்து வந்த தினகரன், தொலைபேசி மூலம் சுகேஷிடம் பேசிய ஆதாரத்தையும், சுகேஷிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருவரின் உரையாடல் குறித்த சிடி ஒன்றையும் போலீசார் போட்டுக் காட்டிய பின், வேறுவழியின்றி சுகேஷ் சந்திரசேகரை தெரியும் என தினகரன் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்திற்காக, நேற்று இரவு தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லி குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ப்ரவீர் ரஞ்சன் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், மேற்கொண்டு மற்ற விஷயங்களை அவர் பேச மறுத்துவிட்டார். அதேசமயம், முன்னரே கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தினகரனை இன்ற பிற்பகல் நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் ஆஜர்படுத்தி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close