சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் தினகரன்... இரண்டு நாட்கள் தீவிர விசாரணை?

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன், விசாரணைக்காக தில்லி போலீஸாரால் சென்னைக்கு...

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன், விசாரணைக்காக தில்லி போலீஸாரால்  சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.  அவரிடம் இரண்டு நாட்களுக்கு சென்னையில் வைத்து விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து,  பெங்களூரு, கொச்சி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்காரணமாக, இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. ஓ.பி.எஸ் அணியினர் தங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினர்.

ஆனால், ஆட்சியே எங்களிடம் தான் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மற்றொரு புறம் கூறி வந்தது. இருதரப்பு விவாதங்களையும் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இடைத் தேர்தல் நெருங்கியதையடுத்து இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது.

இதன்காரணமாக இடைத்தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய பெயரில் இரண்டு அணிகள் உருவானது. அதிமுக அம்மா அணியின் சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து, இடைத் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக டிடிவி தினகரனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய் கிழமை வரை டிடிவி தினகரனிடம் தில்லி போலீஸார் துருவி துருவி கேள்வி கேட்டனர். மேலும், தினகரனின் பெங்களூரு நண்பர் மல்லிகார்ஜுனாவிற்கு, இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் அறிமுகமானவராக இருந்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டுமானால் சுகேஷ் சந்திரசேகரின் உதவி தேவைப்படும் என தினகரனின் வழக்கறிஜர் குமாரிடம், மல்லிகார்ஜுனா கூறியிருக்கிறார். இது குறித்த விஷயத்தை வழக்கறிஞர் குமார், டி.டி.வி.தினகரனிடம் தெரிவித்ததாகவும், அதன் பிறகு தினகரன், சுகேஷிடம் பலமுறை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. முதலில், இந்த குற்றச்சாட்டை தினகரன் திட்டவட்டமாக மறுத்தார். பின்னர், தில்லி போலீஸார் வைத்திருந்த ஆதரங்களால், டிடிவி தினகரன் தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. பெங்களூர் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் நடத்திய உரையாடலையும் தில்லி போலீஸார் வைத்துள்ளனர்.

இதன் பின்னர், செவ்வாய் கிழமை இரவு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை, 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி அனுமதி அளித்தார். தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து கூடுதல் ஆதாரங்களை கைப்பற்ற வேண்டும் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இதற்காக டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இடைத்தரகர் சுகேஷ் ஏற்கனவே சென்னை, கொச்சி நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, அவரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர் போலீஸார்.

இந்நிலையில், டிடிவி தினகரனை தில்லி போலீஸார் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அவருடன் மல்லிகார்ஜுனாவும் அழைத்து வரப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறை துணை கமிஷ்னர் சஞ்சய் சகாவத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அவர்களை அழைத்து வந்துள்ளது.

ரூ. 50 கோடியில் முதல் தவணையாக ரூ.10 கோடி பறிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரூ.10 கோடி மல்லிகார்ஜுனா மூலம் கை மாறியுள்ளதாம். சென்னையில் இருந்து டெல்லிக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல ஹவாலா ஏஜெண்ட் உதவியை மல்லிகார்ஜுனா நாடியுள்ளதாக தெரிகிறது. தில்லியில் உள்ள தரகர்கர்கள் மூலம், சுகேஷிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சுகேஷிடம் இருந்து ரூ.1.3 கோடி மட்டுமே தில்லி போலீஸார் கைப்பற்றினர்.

மீதமுள்ள ரூ.8.7 கோடி பணம் என்ன ஆனது என்பது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்தவாரே இருந்து வருகிறது. இதனை கண்டறியும் நோக்கிலேயே தில்லி போலீஸார் தற்போது அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close