டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹவாலா தரகர்களுக்கு பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைத்தால் முடக்கப்பட்ட ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க டிடிவி தினகரன் தேர்தல் ஆணைத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி டிடிவி தினகரனை, தில்லி போலீஸார் கடந்த 25–ந்தேதி கைது செய்தனர்.
இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக தில்லி போலீஸாரால் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் வகையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் தில்லி போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதற்காக தில்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
அவர்களை சென்னை கொண்டுவந்த போலீஸார், டிடிவி தினகரனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். நேற்று மூன்றாவது நாளாக சென்னையில் விசாரணை மேற்கொண்டபோது, டிடிவி தினகரன், தரகர் சுகேஷை சந்தித்தை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. முதலில், சுகேஷ் யாரென்று தனக்கு தெரியாது என்று கூறிவந்த நிலையில் பின்னர் ஒப்புக் கொண்டார் தினகரன். ஆனாலும், தான் எந்தவித பணமும் சுகேஷிடம் கொடுக்கவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்து வருகிறாராம். சென்னையில் நேற்று விசாரணையை முடித்துக்கொண்ட தில்லி போலீஸார், டிடிவி தினகரனை மீண்டும் தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/04/TTV_Dhinakaran-EPS.jpg)
இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஹவாலா தரகர் நரேஷிடம் இருந்து, இன்று ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, இந்த பணமானது இடைத்தரகர் சுகேஷிடம் கொடுக்க கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகளின் விபரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் செய்திகள் தெரிவிப்பதாவது, டிடிவி தினகரனின் வங்கிக் கணக்குகளில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா தரகர்களுக்கு அதிகமான பணம் பரிமாறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றன. மக்கள் உன்னிப்பாக கவனித்து வரும் இந்த வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.