டிடிவி தினகரனிடம் 4 மணி நேரம் விசாரணை… வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை

டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்த தில்லி போலீஸார் அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

By: Updated: April 28, 2017, 04:39:05 PM

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய் கிழமை வரை டிடிவி தினகரனிடம் தில்லி போலீஸார் துருவி துருவி கேள்வி கேட்டனர். மேலும், தினகரனின் பெங்களூரு நண்பர் மல்லிகார்ஜுனாவிற்கு, இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் அறிமுகமானவராக இருந்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டுமானால் சுகேஷ் சந்திரசேகரின் உதவி தேவைப்படும் என தினகரனின் வழக்கறிஜர் குமாரிடம், மல்லிகார்ஜுனா கூறியிருக்கிறார். இது குறித்த விஷயத்தை வழக்கறிஞர் குமார், டி.டி.வி.தினகரனிடம் தெரிவித்ததாகவும், அதன் பிறகு தினகரன், சுகேஷிடம் பலமுறை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. முதலில், இந்த குற்றச்சாட்டை தினகரன் திட்டவட்டமாக மறுத்தார். பின்னர், தில்லி போலீஸார் வைத்திருந்த ஆதரங்களால், டிடிவி தினகரன் தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இடைத்தரகர் சுகேஷ் ஏற்கனவே சென்னை, கொச்சி நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, அவரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர் போலீஸார்.

ரூ. 50 கோடியில் முதல் தவணையாக ரூ.10 கோடி பறிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து டெல்லிக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல ஹவாலா ஏஜெண்ட் உதவியை மல்லிகார்ஜுனா நாடியுள்ளதாக தெரிகிறது. தில்லியில் உள்ள தரகர்கர்கள் மூலம், சுகேஷிடம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சுகேஷிடம் இருந்து ரூ.1.3 கோடி மட்டுமே தில்லி போலீஸார் கைப்பற்றினர்.மீதமுள்ள ரூ.8.7 கோடி பணம் என்ன ஆனது என்பது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்தவாரே இருந்து வருகிறது.
இந்நிலையில், டிடிவி தினகரனை தில்லி போலீஸார் விசாரணைக்காக நேற்று மதியம் சென்னை அழைத்து வந்தனர். அவருடன் மல்லிகார்ஜுனாவும் அழைத்து வரப்பட்டார். டெல்லி காவல்துறை துணை கமிஷ்னர் சஞ்சய் சகாவத் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அவர்களை அழைத்து வந்தது.

இருவரும் விமான நிலையத்தில் இருந்து பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களிடம் சிறிது நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக, பெசன்ட் நகரில் உள்ள அவரது விட்டுக்கு போலீஸார் அவரை அழைத்து வந்தனர். அவருடன் மல்லீகார்ஜுனாவையும் போலீஸார் தனி காரில் கொண்டு வந்தனர்.

வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட தினகரனை பார்ப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்தனர். சிலர், தினகரனை பார்ப்பதற்காக முண்யடித்ததால், தில்லி போலீஸார் அவர்களுக்கு அனுமதி மறுத்து வீட்டின் கதவையும் இழுத்து மூடினர்.

இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்வது தில்லி போலீஸார் என்பதால் தமிழக போலீஸார் யாரையும் அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. பின்னர், வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றும் வகையில் பீரோல், கம்யூட்டர் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகளில் இருந்த ஆவணங்களை சேகரித்தனர். மேலும், தினகரனின் மனைவி அனுராதாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், மாலை சுமார் 6-மணியளவில் மல்லிகார்ஜுனாவை, தினகரனின் அலுவலகத்திற்கு அழைத்து சென்று தில்லி போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த அலுவலகத்தை மல்லிகார்ஜுனா நிர்வகித்து வருவதால் அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, அலுவலகத்தின் அறைகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த விசாரணையானது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்தது.

இதன்பின்னர், மல்லிகார்ஜுனாவை அவரது வீட்டுக்கு தனியாக அழைத்துச் சென்ற தில்லி போலீஸார், வீட்டின் அறைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த நேரத்தில் தினகரன் வீட்டிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் அதிக ஆவணங்களை கைப்பற்றும் முயற்சியில், டிடிவி தினகரனிடம் தில்லி போலீஸார் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த பின்னர் தினகரன் ராஜாஜி பவனில் தங்க வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்றும் தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த விசாரணைக்கு பின்னர் அவரை கொச்சிக்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்த தில்லி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து தில்லி திரும்பிய ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில் சென்னையில் இருந்து கொச்சி வழியாக தில்லிக்கு பணம் அனுப்பியதாக தகவல் வெளியானது. இதற்கு தரகராக நரேஷ் செயல்பட்டார் என கூறப்படுகிறது. அதனடிப்படையில், நரேஷை தில்லி போலீஸார் தேடி வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிடிவி தினகரனுக்கும், நரேஷுக்கும் நேரடியாக தொடர்பு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நரேஷுடம் இருத்து பல்வேறு தகவல்களை பெறுவதற்காக தில்லி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Delhi police investigated ttv dinakaran in his home

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X