பொன்.ராதாகிருஷ்ணனை ஓரம்கட்டும் டெல்லி? பரபர பின்னணி

சமீபநாட்களாக தமிழகம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை டெல்லி ஓரங்கட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபநாட்களாக தமிழகம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை டெல்லி ஓரங்கட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க. என்றாலே பொன்.ராதாகிருஷ்ணன் என இருந்த காலம் உண்டு. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. சார்பில் அவர் மட்டுமே ஜெயித்ததும், அவரது டெல்லி செல்வாக்கு இன்னும் அதிகரித்தது. தமிழகத்தின் பிரதிநிதியாக முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் துறையில் அவரை இணை அமைச்சர் ஆக்கினார் மோடி.

தொடர்ந்து இவருக்கு பிறகு தமிழிசை செளந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாலும், இணை மற்றும் துணை நிர்வாகிகளாக 90 சதவிகிதம் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களே இடம் பெற்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியை முடிவு செய்வதில் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியப் பங்கு வகித்தார்.

ஆனால் கடந்த ஓரிரு மாதங்களாக இந்த நிலைமையில் தலைகீழ் மாற்றம்! கடந்த ஜூலை 27-ம் தேதி ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் என்ற முறையில் இதில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்போது எம்.பி.யாக மட்டுமே இருந்த வெங்கையா நாயுடுவும், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் அந்த விழாவில் முன்னிலைப்படுத்தப் பட்டனர்.

நிர்மலா சீத்தாராமனைப் பொறுத்தவரை, பூர்வீகம் தமிழகம் என்றாலும் ஆந்திராவில் செட்டில் ஆனவர். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முக்கியத்துவத்தை குறைக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் காண முடிகிறது.

ஜூலை 30-ம் தேதி ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழக தொழில் அதிபர்களை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சென்னை வந்தார். வர்த்தக துறை அமைச்சர் என்ற முறையில் அவருடன் அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் வந்தது சரியே! ஆனால் தமிழகத்தின் ஒரே பா.ஜ.க. எம்.பி. என்ற அடிப்படையிலாவது பொன்.ராதாகிருஷ்ணனை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம் என்பதே உள்ளூர் பா.ஜ.க.வினரின் ஆதங்கம்!

தமிழக தொழில் அதிபர்களுடன் மத்திய நிதி அமைச்சரும், வர்த்தக அமைச்சரும் கலந்தாலோசனை செய்தபோது தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் இடம் பெறாதது ஏன்? என்கிற கேள்வி அங்குள்ள தொழில் அதிபர்கள் மத்தியிலேயே ஓங்கி ஒலித்தது. அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவிலும் அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன், தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ஆகிய மூவருமே கலந்துகொண்டனர். அன்று இந்த தர்ம சங்கடத்தை தவிர்க்கும் விதமாக தனது துறை சார்ந்த பணி ஒன்றை வட மாநிலம் ஒன்றில் பொன்.ராதாகிருஷ்ணன் அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம்விட, நீட் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ‘ஆப் தி ரெக்கார்ட்’டாக மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை பிரதமர் மோடி அமைத்திருக்கிறார். அதில் இடம்பெற்றவர்கள், சுகாதாரதுறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரசிங், வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இவர்களில் மற்ற இருவரும் சம்பந்தப்பட்ட துறை காரணமாக இடம் பெற்றவர்கள். நிர்மலா சீத்தாராமன், தமிழக பிரதிநிதியாக இடம் பெற்றவர் என்கிறார்கள்.

இந்தக் குழுதான், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு கொடுக்க வேண்டும்’ என பிரதமருக்கு பரிந்துரைத்தது. ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு வழங்கத் தயார்’ என்கிற மத்திய அரசின் அறிவிப்புமே நிர்மலா சீத்தாராமன் மூலமாக வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி தெரிவித்து பேட்டியும் கொடுத்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முழுக்க பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக ‘ஆப்பரேட்’ செய்த பா.ஜ.க. மேலிடம், இப்போது நிர்மலா சீத்தாராமனை தமிழக பிரதிநிதியாக களம் இறக்கிவிட்டதன் அடையாளம் இது! அப்படி என்னதான் பொன்னார் மீது மேலிடத்திற்கு அதிருப்தி என விசாரித்தால், ‘மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகும், மொத்த நிர்வாகிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அவர். தமிழக பா.ஜ.க.வின் தன்னை தனிப்பெருந்தலைவராக அவர் முன்னிறுத்தியதை மேலிடம் விரும்பவில்லை. அப்படி முன்னிறுத்தி, கட்சியையும் பெரிதாக வளர்க்கவில்லை என்பதுதான் மேலிடத்தின் கோபத்திற்கு காரணம்’ என்கிறார்கள், கட்சி வட்டாரத்தில்!

மத்திய அமைச்சரவையின் அடுத்த மாற்றத்தின்போது, பொன்னார் தப்பினால், அது அவரது அதிருஷ்டம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

×Close
×Close