நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவில் இழந்து நிற்கிறோம் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பவர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பவர்-8-ம் தேதி கருப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்றும், நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் எதிர்கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தன.அதன்படி திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
மதுரையில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், இடது சாரிகள், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
இதனிடையே மு.க ஸ்டாலின் பேசும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில் வளர்ச்சி முடக்கம் போன்றவற்றினால் நாட்டின் தொழில்வளர்ச்சி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்தே ஆக வேண்டும்.
கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என்று கூறினார்கள். ஆனால், 125 கோடி மக்களின் துன்பத்தை உருவாக்கியிருக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வேளையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நள்ளிரவில் தான் நாம் சுதந்திரம் பெற்றோம். ஆனால், தற்போது நள்ளிரவில் நமது சுதந்திரத்தை இழந்து நிற்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர் அது தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினாரா? பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாஜக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும், பாஜக-வின் கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை வந்தபோது, கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். என்னை சந்தித்துத்துப் பேசினார். இந்த சந்திப்பை பலர் சமரசம் என்றும், அதையும் தாண்டி கூட்டணி உருவாகக் கூடிய நிலை வந்துவிட்டது என்றும் செய்திகளை பரப்பினர். இந்த சந்திப்பானது அரசியலுக்கு அப்பார்பட்டு, மனிதாபிமான ரீதியிலானது. இதனை திரித்து அரசியல் சாயம் பூச நினைப்பவர்களின் கனவு நிச்சயம் நிறைவேறாது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை போலவே, ஜி.எஸ்.டி-யும் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.