கரும்பு விவசாயிகளுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசு அறிவித்த கூடுதல் தொகையைக் கொடுக்காத சர்க்கரை ஆலையையும், தமிழக அரசைக் கண்டித்தும் தேமுதிக நிரந்தரப் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2014-ஆம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.350 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த தொகையை தனியார் சர்க்கரை ஆலைகளும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் சரியான முறையில் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கண்டிக்கும் விதமாக, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று தே.மு.தி.க. சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து கார் மூலம் விஜயகாந்த் இன்று விழுப்புரம் வந்தார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அவருக்கு தே.மு.தி.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்பு அவர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பந்தலுக்கு மதியம் 12.10 மணிக்கு வந்தவுடன், அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. திரளான தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள், கரும்பு விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய விஜயகாந்த், "இரட்டை இலை சின்னம் முடங்க காரணமான ஓபிஎஸ்சுடன் ஈபிஎஸ் இணைந்துள்ளார். கந்துவட்டியை ஒழிக்க அரசு தவறிவிட்டது. அம்மா அரசு, அம்மா அரசு என்று சொல்கிறீர்களே, வெட்கமாகயில்லை உங்களுக்கு? அம்மா ஆட்சி நடக்கிறது என்றால் கந்துவட்டி தொழிலை ஒழித்திருக்க வேண்டும். தமிழகத்தில் முதலிடம் வகிப்பது டெங்குவும், லஞ்சமும் தான். கந்துவட்டி பிரச்சனைகளில் காவல்துறைக்கு காசு கொடுத்து சரி செய்து விடுகிறார்கள். அதை தடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவிற்காக மட்டும் தமிழக அரசு அதிக அளவு பணத்தை செலவு செய்கிறது. சிவாஜி, கமல்ஹாசனை விட பிரமாதமான நடிகர்கள் ஓ.பி.எஸ்ஸும், இ.பி.ஸ்ஸும் தான்" என்றார்.