டெங்கு பெயரில் பொதுமக்களிடம் அபராதம் வசூலிப்பது வெட்கக் கேடு : ஜி.ராமகிருஷ்ணன்

டெங்கு அவலத்திற்காக பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

By: October 27, 2017, 10:01:46 PM

டெங்கு அவலத்திற்காக பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் அக்டோபர் 23, 24 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (27.10.2017) சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது விளக்கினார். அதன் விபரம் வருமாறு:

செல்லா நோட்டு அறிவிப்பும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. அரசின் தவறான கொள்கையினால் தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை ஆகிய 3 துறைகளுமே சீர்குலைந்துள்ளது. ஏழைகள் – விவசாயிகளுடன், சிறு குறுந்தொழில்களும், நடுத்தரத் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

35 லட்சம் பேருக்கு மேலானோர் இருந்த வேலையை இழந்து நிற்கும் சூழலுக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி அலைந்து திரியும் அவல நிலை உள்ளது. கடன் நெருக்கடி, வறட்சி, இடுபொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படவில்லை, இதனால் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

பாஜக அரசின் மோசமான கொள்கைகளும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அம்பலப்பட்டுவருகின்றன. தமிழகத்தில் சில நிமிட சினிமா வசனங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் தமிழக பாஜக தலைவர்கள் இறங்கினார்கள். ஆனால் மக்கள் பாஜக தலைவர்களின் கருத்தை ஏற்கவில்லை.

பாஜக அரசின் வகுப்புவாத, வன்முறை அரசியலையும் – ஊழல் புரையோடிய மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் நாடு முழுவதும் எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி போராடி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். மாற்றுக் கொள்கைகளை அமலாக்கி முன்னோக்கி செல்லும் சிபிஐ (எம்) கட்சியின் மீது பாஜகவினர் நாடு முழுவதும் கொலைவெறித் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதென கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

அதிமுக அரசாங்கத்தின் நோக்கம், அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. மத்திய ஆட்சியைப் பயன்படுத்தி அதிமுகவை வளைத்திருக்கிறது பாஜக. அதிமுகவும் அதிகாரத்தை தக்க வைக்க அவர்களின் தயவு நாடி நிற்கிறது. ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதியை தாமதப்படுத்தும் நிலையில் அதனைப் போராடிப் பெற்றிட முயலாத ஆட்சியாளர்கள், கோரிக்கை வைத்து காத்திருக்கிறார்கள். மோடி எங்களைக் காப்பாற்றுவார் என்று ஒரு அமைச்சரே பேசியிருப்பது வெட்ககரமானது – கண்டிக்கத்தக்கது.

டெங்கு விஷக் காய்ச்சலால் தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மரணச் செய்திகள் அதிரடியாக வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அமைச்சர்கள் உண்மையை மூடி மறைக்கும் வகையில் அறிக்கைவிட்டு வருவதுடன் டெங்குவை கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

மேலும் சுகாதார சீர்கேடுகள் என பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது வெட்கக்கேடானதாகும். உள்ளாட்சி நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின்றி சொந்த அரசியல் நோக்கங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன. கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் 4 உயிர்கள் கருகி மாய்ந்துபோன கொடூரத்திற்கு பின்னர், மாநில முழுவதும் பல்லாயிரம் குடும்பங்களின் கந்துவட்டி கொடுமைகளும் அது தொடர்பான தற்கொலைகளும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, கட்டுப்பாடு அனைத்தும் சீர்கெட்டு கிடக்கிறது. தார் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல் என வகைதொகையின்றி ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிரானைட் ஊழல் குறித்த சகாயம் குழு அறிக்கை, தாது மணல் கொள்ளை குறித்த ககன் தீப் சிங் பேடி அறிக்கை உள்ளிட்ட அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு தூசிபடிந்து மக்கிப் போகச் செய்யப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தட்டிக்கேட்கும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன; குண்டர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சமூக செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மொத்தத்தில் ஆளத்தகுதியற்ற அரசாக அதிமுகவின் அரசு மாறியிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் 2017, அக்டோபர் 31 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம் நடைபெறவுள்ளது. இவ்வியக்கத்தில் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள், கட்சி கிளைகள் மற்றும் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் ஈடுபட வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்களின் நலன் காக்கும் இப்பேரியக்கத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dengue fever fine collection from public is shamefull

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X