Advertisment

டெங்கு காய்ச்சல்: அரசின் தோல்வியை மறைக்க மக்கள் மீது பழி போடுவதா? எடப்பாடிக்கு அன்புமணி கண்டனம்

டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்துவதில் மக்களுக்கு உள்ள விழிப்புணர்வு கூட அமைச்சர்களுக்கு இல்லை என்கிறார் அன்புமணி

author-image
Ganesh Raj
Oct 15, 2017 14:42 IST
New Update
Anbumani Ramadoss, DMK, Tamilnadu Government, Dengue fever, AIADMK,

டெங்குவை ஒழிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் மக்களைக் குற்றவாளிகளாக்க முயல்கிறார் என பாமக நிறுவனர் அன்மணி மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு பகலாக பாடுபட்டு வருவதாகவும், மக்களின் ஒத்துழைப்பு தான் இப்போது மிகவும் அவசியம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசின் தோல்வியை மறைக்க பொதுமக்கள் மீது முதலமைச்சர் பழிபோடுவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

இந்தியாவில் டெங்குக் காய்ச்சலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 31 ஆயிரமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 262 ஆகவும் அதிகரித்துள்ளது. டெங்கு தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு வல்லுனர் குழுவை அனுப்பி ஆய்வு செய்திருக்கிறது. அதன்தொடர்ச்சியாக தமிழகத்தில் டெங்கு நிலையை ஆய்வு செய்ய மத்திய சுகாதார இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சென்னை வந்துள்ளார்.

ஆனால், தமிழக அரசோ டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தை முழுமையாக உணராமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணிகளை சவாலாக எடுத்துக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் தேவையின்றி அரசியல் செய்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் குற்றம்சாட்டியிருக்கிறார். டெங்குவைக் கட்டுப்படுத்த எதையுமே செய்யாமல், எதிர்க்கட்சிகளையும், பொதுமக்களையும் விமர்சிப்பதன் மூலம் முதலமைச்சர் தான் இப்பிரச்சினையை அரசியலாக்குகிறார்.

டெங்குவை ஒழிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் மக்களைக் குற்றவாளிகளாக்க முயல்கிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு பகலாக பாடுபடுவதாகக் கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அப்படி என்னென்ன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது என்பதைப் பட்டியலிடத் தயாரா?

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது வீடுகளிலும், வீட்டை ஒட்டிய பகுதிகளிலும் நல்ல நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது தான். டெங்குக் காய்ச்சல் கடந்த 5 மாதங்களாக பரவி வருவதாலும், அதுகுறித்த விழிப்புணர்வை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்படுத்தி வருவதாலும் மக்கள் விழிப்புணர்வு பெற்று தங்களின் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் மிகவும் தூய்மையாகவே வைத்திருக்கின்றனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை அவர்கள் அவர்களின் கடமையை மிகவும் சிறப்பாகவே செய்திருக்கின்றனர். ஆனால், தமிழக அரசு டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் முதலமைச்சரும், தமிழக அரசும் அவரவர் கடமைகளை செய்திருக்கிறாரா? என்பதை முதல்வரும், அமைச்சர்களும் கண்ணாடி முன் நின்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றால் அவை முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலமும், தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் தான். இந்த மாவட்டங்களில் துப்புரவுப் பணிகளும், சுகாதாரப் பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை என்பது தான் உண்மை.

அனைத்துத் தெருக்களிலும் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. அவற்றில் கிடக்கும் கொள்கலன்களில் தேங்கியுள்ள மழை நீரிலிருந்து டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உருவாகின்றன. சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் குப்பை அள்ளும் பணிகள் சரியாக நடைபெறுகின்றனவா என்பதை என்னுடன் நேரில் வந்து ஆய்வு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாரா?

டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் மக்களுக்கு உள்ள விழிப்புணர்வு கூட அமைச்சர்களுக்கு இல்லை. அதனால் தான் வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது என்றும், பருவமழை அதிகமாக பெய்யும் போது டெங்குக் காய்ச்சல் பரவுவது சகஜம் தான் என்றும் உளறி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல்: அரசின் தோல்வியை மறைக்க மக்கள் மீது பழி போடுவதா? எடப்பாடிக்கு அன்புமணி கண்டனம்

தங்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட அமைச்சர்களுக்கு இல்லை. சட்டப்பேரவைத் தலைவர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோரின் வீடுகளுக்கு வெளியில் குப்பைகளும், கட்டிட இடிபாடுகளும் குவிந்து கிடப்பதை ஏடுகள் படம் பிடித்து வெளியிட்டுள்ளன. அதற்குப் பிறகும் அவை அகற்றப்படவில்லை என்பதிலிருந்தே டெங்கு குறித்த அமைச்சர்களின் விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அரசு மேடை கிடைத்து விட்டது என்பதற்காக எதிர்க்கட்சிகள் மீதும், பொதுமக்கள் மீதும் பழி சுமத்துவதற்கு பதிலாக அரசாங்க அதிகாரம் கிடைத்திருப்பதைப் பயன்படுத்தி டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் டெங்கு காய்ச்சலை விட பேரழிவை ஏற்படுத்தும் அரசாகத் தான் எடப்பாடி தலைமையிலான இந்த பினாமி அரசாங்கத்தை மக்கள் பார்ப்பர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

#Dmk #Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment