டெங்கு காய்ச்சலை அரசு சவாலாக எடுத்து கட்டுப்படுத்தி வருகிறது. மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நுற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசும்போது: சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தூய்மையான கிராம இயக்கம் என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். ஜெயலலிதான் அந்த நோக்கம் நிறைவேற்ற வேண்டுமானால், கிராமங்களையும், நகரங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. இதற்காக மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். மேலும், அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், கூடுதலாக படுக்கை வசதிகள், உபகரணங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சலை அரசு சவாலாக எடுத்து கட்டுப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கூட்டாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.டெங்கு காய்யச்சலை ஒழிக்க அரசு எடுக்கும் முயற்சி போதுமானதா? என்றால் போதுமானது அல்ல என்றே கூறவேண்டும். ஏனென்றால், டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும். பொதுமக்களுடன் ஒத்துழைப்போடு தான் டெங்கு காய்ச்சலை விரைவாக ஒழிக்க முடியும்.
சுகாதாரம் குறித்தும், கொசு ஒழிப்பு குறித்தும் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து அறிவிந்தவர்கள், அறியாதம மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசு மருத்துவக் குழுவினருடன் இளைஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் பட்ச்சத்தில் டெங்கு கொசுவை விரைவில் ஒழித்துவிடலாம்.
சிலர் எல்லாவற்றையும் அரசியலாக்கி ஆதாயம் தேடுகின்றனர். அவர்கள் அவ்வாறு பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நாங்கள் மக்கள் சேவையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் குற்றச்சாட்டுகளை தேடி கண்டுபிடித்து கூறுகின்றனர். ஆனால், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க் கட்சிகளுக்கும் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிட்டதாக தான் தெரிகிறது.
பிரச்சனைகள் ஏற்படும் போது அதிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையில், ஆட்சியார்களுக்கு கருத்துகள் தெரிவிக்கலாம். ஆனால், அதெல்லாம் விட்டுவிட்டு அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பி, மக்களை பீதியில் ஆழ்த்துகின்ற செயல்களை செய்கின்றனர். இதுபோன்ற செயல்கள் மிகவும் தவறானதாகும்.
இந்த ஆட்சி குறித்து திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். இந்த ஆட்சியை களங்கப்படுத்தும் நோக்கில் தான், இந்த ஆட்சி டெங்கு ஆட்சி என மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளதாக கருதுகிறேன். என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.