தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் மயில் சாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சிறிய முயற்சியாக, சென்னை சாலிகிராமத்தில் வீடு வீடாக சென்று நில வேம்பு கசாயம் வழங்கியுள்ளார் நடிகர் மயில்சாமி. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் தோறும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் மயில்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் மயில்சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்பதை கேட்கமுடிகிறது. உதாரணமாக ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் வார்டு கவுன்சிலர் இல்லை என்பதல், சுகாதரப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை. வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு வேகமாக செயல்படவில்லை. டெங்கு காய்ச்சலால் பரவிவரும் நிலையில், அரசு பாதுகாக்கும் என்று காத்திருக்காமல், நம்மை நாமே முன்னெச்சரிக்கையாக காத்துக் கொள்ள வேண்டும், முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை கசாயம் பருக வேண்டும் என்று கூறினார்.