Advertisment

டெங்கு காய்ச்சல்: உயிரிழப்பு தொடர்பான புள்ளி விவரத்தை குறைக்க தவறான சிகிச்சை? ராமதாஸ் கண்டனம்

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய்யான புள்ளி விவரம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dengue Fever, Minister C Vijayabaskar, Mystery fever,

TN live Updates : Dengue in Tamil nadu

புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு செய்வதை விடுத்து டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் சிகிச்சைகள் குறித்த உண்மையான விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தால் மத்திய அரசிடமிருந்து தேவையான உதவிகளைப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் எப்படியாவது தடுக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக அவர்கள் கையாண்டு வரும் அணுகுமுறை மிகவும் விபரீதமானதாகும். மனசாட்சியற்ற இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

டெங்குக் காய்ச்சலின் தாக்கம் மிக மோசமாக அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக புள்ளி விவரங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு டெங்கு நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுபவர்களுக்கு எந்த ஆய்வும் செய்யாமல் நேரடியாக வைரஸ் காய்ச்சலுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு சுகாதாரத்துறையிலிருந்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மருத்துவம் பயனின்றி உயிரிழப்பவர்களை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்க்காமல் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததாக கணக்கு காட்ட வேண்டும்; மருத்துவமனைகளில் டெங்குவுக்காக மருத்துவம் பெற வந்தவர்களை வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவம் பெற வந்தவர்கள் எனக் கணக்கு காட்ட வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.

இதன்மூலம் அடுத்த சில நாட்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து விட்டதாகக் கூறி பெருமிதப்பட்டுக் கொள்வதுதான் ஆட்சியாளர்களின் திட்டமாகும். அதேநேரத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்து விட்டதாக திசை திருப்பப்படும்.

ஒருவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ, அந்த நோய்க்கு மருத்துவம் அளிப்பதுதான் மருத்துவ நெறியாகும். அதற்கு மாறாக, ஒருவருக்கு என்ன வகையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பதையே கண்டறியாமல் மருத்துவம் அளிப்பது மருத்துவ நெறிகளுக்கு எதிரான செயலாகும்.

இந்த நெறி மீறலைச் செய்யும்படி அரசே தூண்டுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. மருத்துவ நெறி மீறல் ஒருபுறமிருக்க எந்த நோய் என்பதையே கண்டறியாமல் மருத்துவம் அளிப்பது உயிரிழப்பு உள்ளிட்ட விபரீதங்களுக்கு வழிவகுக்கும். நோயாளிகளை காக்க வேண்டிய மருத்துவம், அவர்களின் இறப்புக்கு காரணமாகக் கூடாது.

தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவது குறித்துக் கடந்த ஜூலை மாதமே ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தேன். அதன் பின்னர் டெங்குவைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை பாமக சார்பில் 5 முறை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போதே தமிழக ஆட்சியாளர்கள் சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் டெங்குவையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், ஊழல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டிய ஆட்சியாளர்கள் டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டியிருக்கிறது. இப்போது கூட டெங்குவால் பாதிக்கப்பட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துக் காட்டும் முயற்சியில் சுகாதாரத்துறை அமைச்சரும், செயலரும் ஈடுபட்டுள்ளனர்.

முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்திவிடக் கூடிய டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய்யான புள்ளிவிவரம் தருவதற்காக சுகாதார அமைச்சரும், செயலரும் வெட்கப்பட வேண்டும்.

புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு செய்வதை விடுத்து டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் சிகிச்சைகள் குறித்த உண்மையான விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தால் மத்திய அரசிடமிருந்து தேவையான உதவிகளைப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Central Government Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment