/tamil-ie/media/media_files/uploads/2017/10/dindigul-seenivasan.jpg)
டெங்கு காய்ச்சல் எனக்கு இல்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக சுகாதார அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
தமிழக அரசு சார்பில் மாவட்டம்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. அதன்படி இன்று (அக்டோபர் 14) மாலை புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்ததால் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே பனிப்போர் என தகவல்கள் பரவின. அதன்பிறகு இருவரும் பொதுமேடையில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. எனவே அது குறித்து இந்த நிகழ்ச்சியில் இருவரும் தெளிவுபடுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.
இந்த விழாவையொட்டி எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அரசு தலையிடாது. அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். நடிகர் சங்கமும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து தான் அதை முடிவு செய்ய வேண்டும். விதிகளை மீறி தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை காலங்களில் எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் வெளிவந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘தமிழகத்தில் இன்று முதல் 40 விநாடிகளில் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எனக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். டெங்கு காய்ச்சல் என்னை பாதிக்காததால் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.’ என காமெடியாக கூறினார் அமைச்சர்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.