கோவைக்கு வந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன்... பா.ஜ.க - வினர் சார்பில் உற்சாக வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசுத் தலைவர் இன்று கோவை வருகை தந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை குடியரசுத் தலைவர் இன்று கோவை வருகை தந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
radhakrishnan

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவைக்கு வருகை தந்துள்ளார். இந்தியாவின் 15 ம் குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக அவர் கோவைக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் குடியரசு துணை தலைவரின் நிகழ்ச்சிகள் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் பா.ஜ.க வினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

Advertisment

முன்னதாக கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் விதமாக சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.  பின்னர் கொடிசியாவில்  தொழிலதிபர்கள், மாநகர முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். 

பிற்பகல் 12:15 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் (சர்க்யூட் ஹவுஸ்) மதிய உணவு, ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் 2.30 மணி அளவில் பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு பேரூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர் பயணம் என திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் பாராட்டு விழா கோவை பீளமேடு பகுதியில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி.கந்தசாமி, பாஜக முக்கிய நிர்வாகிகள், தொழில்துறையினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கோவை விமான நிலையத்திற்கு வந்த துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துணை குடியரசுத்தலைவராக தேர்வு செய்த உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும், இந்த தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள். ஊடகங்களை பின்னர் சந்திக்கிறேன். நன்றி" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன் , "கயிறு வாரிய தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி வகித்த போது, இந்தியாவின் கயிறு ஏற்றுமதி 2500 கோடி ரூபாயை தாண்டியது. கோவை தொழில்துறையினரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். 120 கிலோமீட்டர் இண்டஸ்டிரியல் காரிடார் செயல்படுத்துவதின் மூலம் 3 மாவட்டங்கள் பயன்பெறும். கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதோடு, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்."

பின்னர் நிகழ்ச்சி மேடையில்  பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், " சென்னைக்கு தான் துணை குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் செல்லும் திட்டம் இருந்தது. ஆனால் செசல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு செல்லுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். இது, கோவை மண் என்னை இழுத்து வந்ததாக கருதுகிறேன். இந்த மண்ணில் இருந்து தான் பொதுவாழ்க்கை துவங்கியது. இந்த மண்ணில் சிந்திய ரத்தம் தான் மத்தியில் நிலையான அரசு தொடர வழிவகுத்துள்ளது. அரசியல் மாச்சரியங்களை கடந்து என்னை வாழ்த்தவும், வரவேற்கவும் வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. துணை குடியரசுத்தலைவர் பதவி எனக்கு மட்டுமான பெருமை அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்கான, தமிழ் மக்களுக்கான பெருமையாக கருதுகிறேன்.

கோவை, எத்தனை தோல்வி வந்தால் அடுத்த வெற்றியை நோக்கி தொடர்ந்து உழைக்கும் மக்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்பட எல்லா தரப்பு மக்களின் பிரச்சனையையும் உடன் நின்று தீர்த்து வைப்பேன். எம்பியாக இருந்த போது, என்.டி.சி தொழிலாளர்களின் போனஸ் பிரச்சனை இருந்தது. மற்ற மாநிலங்களில் என்.டி.சி மில்கள் இயங்காமல் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் கோவை என்.டி.சி மில்கள் உற்பத்தியை பெருக்கிக்கொண்டு சம்பள பிரச்சனையை எதிர்கொண்டனர். அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்த போது டெல்லியில் பேசி அப்பிரச்சனையை தீர்த்து வைத்தேன். அப்போதைய சி.ஐ.டி.யு தொழிற்சங்க தலைவர் அய்யப்பன், என்னை வாழ்த்தினார். தொழிலாளர்களை காக்காத தொழில் பட்டுப்போய்விடும்.

எல்லோருடைய நலனையும் காக்க வேண்டும் என்ற நினைப்பை நாடு முழுமைக்கும் எடுத்து சொல்லும் மாவட்டம் கோவை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது பிற மாநிலங்களின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த பல பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. தொழில்துறையும் சேர்ந்து வளர்வது தான் வளர்ச்சி. நான் கயிறு வாரிய தலைவராக பொறுப்பேற்ற போது 2 பொருட்கள் மட்டுமே தயார் செய்யப்பட்டது. 1954 முதல் 2016 வரை இந்தியாவில் இருந்து 652 கோடி ரூபாய்க்கு மட்டுமே கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவேன் என சொன்னேன். 3 ஆண்டுகளுக்கு பிறகு 1782 கோடியாக உயர்ந்தது.

2 முறை எப்படி வென்றேன் எனவும் தெரியவில்லை. 3 முறை எப்படி தோற்றேன் எனவும் தெரியவில்லை. எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு நகரங்களில் நின்று செல்லும் ரயில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மாடர்னைசேஷன் என்ற பெயரில் தொழிலாளர்களே இல்லாத தொழிலை வளர்ச்சி அடைய செய்ய முடியாது. ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் கோவை வர தினந்தோறும் ரயில் சேவை விரைவில் வர உள்ளது. விமான நிலையங்கள் ஏன் வளர்ச்சியடைய வேண்டும்? கர்நாடகா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பது பெங்களூரு விமான நிலையத்தின் விரிவாக்கம் காரணமாகத்தான். அதுபோல் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கும் உறுதுணையாக இருப்பேன். விக்சித் பாரத் வளர்ச்சியில் கோவையின் பங்களிப்பை அதிகமாக இருக்கும் என்றார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: