தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் தேவதாசி முறை குறித்து 4 வாரங்களில் விளக்கமளிக்குமாறு, இரு மாநில தலைமை செயலாளர்கள், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், தேவதாசி முறையை போன்று இன்றளவும் சிறுமிகளை கோவிலுக்கு நேர்ந்துவிட்டு, ‘பொது சொத்து’ போல அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பல புகார்கள் வந்தன.
அந்த புகாரில் உள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டதாவது:
சிறுமிகள் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டு திருவிழாவிற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு, 5 இளைஞர்கள் அப்பெண்களை நிர்வாணப்படுத்திய பின்னர், அச்சிறுமிகள் மாதம்மா கோவிலுக்கு நேர்ந்து விடப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன்பின்னர், அச்சிறுமிகளுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் கல்வி கற்கவும் உரிமையில்லை. மேலும், அச்சிறுமிகளை பலரும் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது தேவதாசி முறையின் மறுவடிவம் எனவும் கூறப்படுகிறது.
இந்த மனித தன்மையற்ற நடைமுறையை கருத்தில் எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது மிகவும் ஆபத்தானது எனவும், உண்மை என நிரூபிக்கப்பட்டால் இந்த நடைமுறை கல்வி உரிமை, வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட மனித உரிமை மீறல் எனவும் கருத்து தெரிவித்தது.
மேலும், இந்த நடைமுறை குறித்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, இரு மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபி, திருவள்ளூர் மற்றும் சித்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகையை நடைமுறை குறித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு குழந்தைகள் உரிமை மேம்பாட்டு மையம் மற்றும் பெண் கல்வி மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக மாவட்ட காவல் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறுமிகளை மாதம்மா கோவிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், ஆந்திர எல்லையில் அமைந்துள்ள இரண்டு அல்லது மூன்று கோவில்களில் இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அச்சிறுமிகள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிறுமிகளே இந்த வழக்கத்திற்கு தள்ளப்படுவதாகவும், அவர்கள் பூப்பெய்திய பிறகு ’பெண் கடவுளின் பாதுகாப்பில் விடுவதாக கூறி கோவிலுக்கு நேர்ந்து விடப்படுவதாக கூறப்படுகிறது. இதன்பின், அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.