கமல்ஹாசனை கைதுசெய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நிலவேம்பு குறித்து தவறான தகவலைப் பரப்பியதற்காக கமல்ஹாசனை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By: Updated: October 19, 2017, 01:17:30 PM

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. ஏகப்பட்ட பேர் இதுவரை காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அலோபதியில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சித்தாவில் சொல்லப்பட்ட நிலவேம்பு கஷாயத்தையும் பலர் குடித்து வருகின்றனர்.

காய்ச்சல் வந்தவர்களுக்கு மட்டுமல்ல, வராமல் தடுக்கவும் நிலவேம்பு கஷாயம் உதவும் என்பதால், அதற்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நிலவேம்பு கஷாயம் குடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து நிலவேம்பு கஷாயம் குடித்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற வதந்தி பரவியது. இதனால் பயந்துபோன பலர், நிலவேம்பு கஷாயம் குடிப்பதை விட்டுவிட்டனர். ஆனால், இது தவறான தகவல் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நிலவேம்பு குடிநீர் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நிலவேம்பு குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

ஆனால், நடிகர் கமல்ஹாசனோ, தன்னுடைய இயக்கத்தினர் நிலவேம்பு குடிநீர் விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு தன்னுடைய இயக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக் கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.

ஆராய்ச்சியை அலோபதியர்தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பரியக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசன் மீது சென்னை, செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  நிலவேம்பு குறித்து தவறான தகவலைப் பரப்பியதற்காக கமலைக் கைதுசெய்ய வேண்டும் என அவர் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவமனைகள் மூலம் தமிழக அரசு நிலவேம்பு குடிநீர் கஷாயம் கொடுத்து வருகிறது. இதுவரை ஒருவருக்கு கூட எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது தனக்குள்ள காழ்ப்புணர்வு காரணமாக தமிழகத்தில் மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் விதமாக இப்படிக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

இதன்மூலம் தான் ஒரு கீழ்த்தரமான நடிகன் என்பதை நிரூபித்துவிட்டார் கமல்ஹாசன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சாதாரண மக்களை சட்டம் உடனடியாகக் கைதுசெய்யும். ஆனால், கமல்ஹாசனை இதுவரை எதுவும் செய்யவில்லை. எனவே, கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தை நீக்குவதோடு, அவரைக் கைதுசெய்து உரிய சட்டப்பிரிவுகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் கூறியுள்ளார் தேவராஜன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Devarajan complaint against kamal haasan regarding nilavembu issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X