/tamil-ie/media/media_files/uploads/2017/09/tk-rajendran-ips.jpg)
19 மாவட்டங்களின் சிறப்பு போலீஸ் படை தலைமையகம் திரும்புகிறது. இது தொடர்பாக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவுக்கு பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழக டிஜிபி (சட்டம் ஒழுங்கு) டி.கே.ராஜேந்திரன் இன்று (செப்டம்பர் 26) பிறப்பித்த ஒரு உத்தரவு போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்ல, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை பற்ற வைத்துவிட்டது. தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் முகாமிட்டிருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் அந்தந்த பட்டாலியன் தலைமையகத்திற்கு திரும்பும்படி பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவு அது!
இதன்படி சென்னை மாநகரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருப்பூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் தற்போது முகாமிட்டிருக்கும் சிறப்பு காவல் படையினர் இன்றே (26-ம் தேதி) அவரவர் சிறப்புக்காவல் படை தலைமையகங்களில் நேரில் சென்று பணியேற்க வேண்டும்.
திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் முகாமிட்டிருக்கும் சிறப்பு காவல் படையினர் செப்டம்பர் 27-ம் தேதி (நாளை) அவரவர் தலைமையகங்களில் ஆஜராக வேண்டும். இவர்கள் மூலமாக நடைபெற்ற பாதுகாப்பு பணிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆயுதப்படை போலீஸாரை பயன்படுத்திக் கொள்ளவும் டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/IMG-20170926-WA0013-1-1-223x300.jpg)
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு பாதிப்படைகிற இடங்களிலும், சென்சிட்டிவான போராட்டங்கள் நடைபெறும் இடங்களிலும் குவிக்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் சமீபநாட்களாக நீட் எதிர்ப்பு போராட்டம், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்கள், ஜாக்டோ-ஜியோ போராட்டம், மது எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவை மும்முரமாக நடந்தன. இதற்காகவே அந்தந்த மாவட்ட போலீஸாருக்கு உதவும் வகையில் சிறப்பு போலீஸ் படையினர் அனுப்பப் பட்டிருந்தார்கள்.
தற்போது அந்தப் போராட்டங்கள் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், சிறப்பு காவல் படையினரை அவரவர் தலைமையகத்திற்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, வெவ்வேறு மாவட்டங்களில் வேலையே இல்லாமல் முடங்கிக் கிடந்த போலீஸாரை தலைமையகம் வர உத்தரவிட்டிருப்பதன் மூலமாக, அவர்களது ரெகுலரான பயிற்சிகள் தங்கு தடையின்றி நடப்பதற்கு டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதைத் தவிர இந்த நடவடிக்கையில் வேறு முக்கியத்துவம் கிடையாது என்கிறார்கள், டிஜிபி அலுவலக வட்டாரத்தில்!
தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருக்கு அவ்வப்போது பணி நேரம், பணியிடம் மாற்றிக் கொடுப்பது வழக்கம். அதற்கு தோதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் விளக்கம் கொடுக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இதற்கு கண் காது மூக்கு வைத்து தகவல்கள் கிளம்பிவிட்டன. ‘தமிழக அரசியலில் ஒரு அசாதாரண சூழல் (ஆட்சி கவிழ்ப்பு?) உருவாக இருப்பதையொட்டி, டெல்லி உத்தரவுப்படி டிஜிபி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக’ இன்று காலையில் இருந்தே வாட்ஸ் அப்களில் தகவல்களை சிலர் பரப்பி விட்டிருக்கிறார்கள்.
வேறு சிலரோ திமுக தலைவர் கருணாநிதி, ம.நடராஜன் ஆகியோரின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை பற்ற வைத்தனர். இதனால் பத்திரிகை அலுவலகங்களுக்கு போன் செய்து ஏராளமானோர் விசாரிக்க ஆரம்பித்தனர். இன்று மாலையில் திட்டமிட்டிருந்த வெளியூர் பயணங்களையும் இந்த வதந்தி காரணமாக பலர் ரத்து செய்தனர்.
இந்த வதந்திகள் குறித்து கோட்டை உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ‘தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உள்ளிட்ட பல அம்சங்கள் சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருக்கிறது. தவிர, நம்பிக்கை வாக்கெடுப்பு ஏதும் நடக்காத நிலையில், பெரிதாக சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் இல்லாத சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்பே இல்லை. எனவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்’ என கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.