ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசியதும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. தமிழர் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என சில கட்சித் தலைவர்கள் கூறினாலும், ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை என சில கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
அவர் அரசியலில் இறங்குவது என உறுதியாக கூறாத நிலையிலேயே அவரது உருவப் பொம்மைகளையும் தமிழ் அமைப்புகள் சில எரித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்தின் ரசிகர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதனால், ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவாரா இல்லையா என்பது ஒரு சர்ச்சையாகவே நீடிக்கிறது.
இந்தநிலையில், ரஜினிகாந்த்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவில் பேசிய தனுஷ், ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்கும். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்களால் எங்களது குடும்பதிற்கு எந்தவித அழுத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.