முதல்முறையாக நேரடியாக களம் இறங்கிய திவாகரன் : அமைச்சர்களை நம்பி கட்சி இல்லை என கருத்து

சசிகலாவின் சகோதரர் திவாகரன் முதல் முறையாக நேரடி அரசியலில் இறங்கியிருக்கிறார். ‘அமைச்சர்களை நம்பி கட்சி இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்.

சசிகலாவின் சகோதரரான திவாகரன் முதல் முறையாக நேரடி அரசியலில் இறங்கியிருக்கிறார். ‘அமைச்சர்களை நம்பி கட்சி இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்.

அதிமுக.வில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் புதிதில்லை. ஆனால் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, வெளிப்படையாக அவர்கள் அரசியலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் தலைமைக்கு கட்சியின் அடிமட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதேசமயம் சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக சொன்ன ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் டெல்லியில் கைகட்டி நிற்பதையும் அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை. இந்தச் சூழலை பயன்படுத்திக்கொண்டு, பா.ஜ.க. மீதான அட்டாக்கை டிடிவி.தினகரன் தரப்பு அதிகப்படுத்தி வருகிறது. இதன் மூலமாக கட்சியின் அடிமட்ட ஆதரவை பெற முடியும் என்பது அவர்கள் கணிப்பு.

இதற்கிடையே டிடிவி.தினகரனின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் நாளை (ஆகஸ்ட் 14) மதுரை மாவட்டம் மேலூரில் தொடங்குகிறது. அங்கு மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது, ‘420’ என எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம், டிடிவி. நீக்கம் தொடர்பான தீர்மானத்தை ஓ.பி.எஸ். தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது குறித்து டிடிவி.தினகரன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு மீதான தாக்குதலை தனது ஆதரவாளர்கள் மூலமாக வெளிப்படுத்துவார் என்கிறார்கள்.

டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று மேலூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் வந்தார். மேடையில் ஏறி, ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர் சில ஆலோசனைகளையும் நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். பல ஆண்டு காலமாக டெல்டா மாவட்டங்களில் மறைமுக அரசியலை மட்டுமே மேற்கொண்ட திவாகரன், முதல் முறையாக நேரடியாக கட்சியினருடன் நின்று ஏற்பாடுகளை கவனித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவரிடம், ‘அமைச்சர்கள் இந்தக் கூட்டத்திற்கு வருவார்களா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு திவாகரன், ‘அமைச்சர்களை நம்பி அ.தி.மு.க. இல்லை. அடிமட்டத் தொண்டர்களை நம்பியே இந்தக் கட்சி இருக்கிறது. அமைச்சர் பதவி என்பது காற்று அடைக்கப்பட்ட பலூன் மாதிரிதான்’ என்றார். மற்றொரு கேள்விக்கு, ‘ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் ஆகிய மூவரையும் சகோதரர்களாகவே நான் கருதுகிறேன்’ என்றார். மேலும், ‘முதல் கட்டமாக டிடிவி திட்டமிட்டிருக்கும் 9 பொதுக்கூட்டங்களும் முடிந்தபிறகுதான் தொண்டர்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியும்’ என்றார் திவாகரன்.

சமீபகாலமாக டிடிவி.தினகரனுக்கும் திவாகரனுக்கும் மோதல் என செய்திகள் வெளியாகின. தற்போது டிடிவி.தினகரனுக்கு நெருக்கடி உருவாகியிருக்கும் சூழலில் பழைய வருத்தங்கள் எதையும் மனதில் வைக்காமல் திவாகரன் தனது சகோதரி மகனுக்காக களம் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dhivakaran entered direct politics says not only ministers are the party

Next Story
‘நீட்’ நாடகம் முடிவுக்கு வருகிறது : ஓ.பி.எஸ். மீண்டும் டெல்லி திரும்பும் பின்னணி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com