டிடிவி.தினகரனுக்கு கவர்னர் ‘அப்பாய்ன்மென்ட்’ பெற்றுக் கொடுத்ததே திவாகரன் தான் என தெரிய வந்திருக்கிறது. இதையொட்டியே திவாகரன் காரில் கவர்னர் மாளிகைக்கு தினகரன் சென்றதாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தில் டிடிவி.தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் என்பதாகவே ஓரிரு மாதங்களுக்கு முன்பு வரை செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இபிஎஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் இணைந்து சசிகலாவை நீக்கத் துணிந்ததும், சட்டென டிடிவி.தினகரனும், திவாகரனும் கை கோர்த்தார்கள். மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி.தினகரன் ஏற்பாடு செய்த பொதுக்கூட்ட மேடையை முன் தினமே பார்வையிட்டு ஆலோசனை கொடுத்தார் திவாகரன்.
ஆனால் அடுத்தடுத்து டிடிவி அணியின் ‘ராஜகுரு’ தோரணையில் திவாகரன் கொடுத்த சில பேட்டிகள் சர்ச்சை ஆகின. குறிப்பாக டி.வி. பேட்டி ஒன்றில், ‘எடப்பாடி அரசுக்கு எதிராக கவர்னரை சந்திப்பீர்களா?’ என அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, ‘கவர்னரை ஓ.பி.எஸ். சந்தித்தாரே, என்ன நடந்தது? அந்த முட்டாள்தனத்தை நாங்கள் செய்ய மாட்டோம்’ என குறிப்பிட்டார் திவாகரன். ஆனால் அவர் இப்படி கூறிய இரண்டே நாட்களில் (ஆகஸ்ட் 22) டிடிவி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.
அடுத்து, மாணவி அனிதா மரணத்தை தொடர்ந்து திமுக ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என திவாகரனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‘நாங்க போகல. ஆனா எங்கப் பிரதிநிதிகள் போவாங்க! அது பொதுவான பிரச்னைதானே?’ என்றார். ஏற்கனவே டிடிவி.தினகரன் அணிக்கும் திமுக.வுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பதாக இபிஎஸ் தரப்பு கூறிவரும் நிலையில், திவாகரனின் இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து டிடிவி.தினகரனிடம் அன்றே நிருபர்கள் கருத்து கேட்டனர். அவரோ, ‘திமுக ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் நாங்கள் எப்படி கலந்துகொள்ள முடியும்? அவர் (திவாகரன்) தனது ஆலோசனையாக கூறியிருப்பார். ஆனால் அது சாத்தியமல்ல’ என்றார். டிடிவி அணி எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வனோ, ‘அது அண்ணன் திவாகரனின் சொந்தக் கருத்து!’ என கருத்து தெரிவித்தார்.
டிடிவி அணியின் ராஜகுருவாக தன்னை வெளிப்படுத்தி வந்த திவாகரனுக்கு தங்க தமிழ்செல்வனின் பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள். இனி திவாகரனே ஏதாவது பேட்டி கொடுத்தாலும், ‘இது உங்கள் அணியின் கருத்தா, அல்லது உங்கள் சொந்தக் கருத்தா?’ என நிருபர்கள் கேள்வி கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சமீப நாட்களாக பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார் திவாகரன்.
ஆனால் இந்தக் குழப்பங்களைத் தாண்டி, டிடிவி.தினகரனுக்கு இன்னமும் திவாகரன் தன்னால் ஆன உதவிகளை செய்துகொண்டே இருக்கிறார். செப்டம்பர் 7-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க டிடிவி.தினகரன் பயணித்தது திவாகரனுக்கு சொந்தமான கார் என தெரிய வந்திருக்கிறது. இந்தக் காரின் எண் உள்ளிட்ட விவரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக முன்கூட்டியே கவர்னர் மாளிகைக்கு கொடுத்தனர். அதன்படி, அந்தக் காரின் எண் டி.என்.22 பி.ஆர்.0555 ஆகும். இந்த ‘லேண்ட் க்ருஸ்யர்’ கார், 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த சோளிங்கநல்லூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திவாகரன் பெயரில் பதிவாகியிருப்பது ஆவணங்களின் மூலமாக தெரிய வந்திருக்கிறது.
சசிகலாவின் சகோதரி மகனான டிடிவி.தினகரனுக்கு தாய்மாமா முறைதான் திவாகரன். எனவே அவர் கார் கொடுத்து உதவியது பெரிய விஷயமில்லை. அவர்கள் இருவர் இடையே அரசியல் ரீதியாகவும் சுமூக உறவு தொடர்வதாக இதை வைத்து புரிந்து கொள்ளலாம். அதைத் தாண்டி, டிடிவி.தினகரனுக்கு கவர்னர் ‘அப்பாய்ன்மென்ட்’-ஐ பெற்றுக் கொடுத்ததே திவாகரன் என கூறப்படுவதுதான் ஹைலைட்!
அதிமுக குழப்பங்கள் அதிகரித்தபிறகு டெல்லியிலோ, சென்னையிலோ மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என யாரையும் டிடிவி.தினகரன் சந்தித்தது இல்லை. காரணம், தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது பதிவான வழக்கு மற்றும் சில அன்னியச் செலாவணி மோசடி வழக்குகளும் அவர் மீது நிலுவையில் இருக்கின்றன. தவிர, அதிமுக துணைப் பொதுச்செயலாளராக அவரை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தனது அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்தபோதுகூட டிடிவி.தினகரன் உடன் செல்லவில்லை. தவிர, அப்போது கவர்னர் நிஜமாகவே டிடிவி அணி எம்.எல்.ஏ.க்களை சந்தித்தாரா? அல்லது உதவியாளர் மூலமாக எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களை பெற்றாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படாத மர்மமாகவே இருக்கிறது.
ஆனால் செப்டம்பர் 7-ம் தேதி அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையிலேயே டிடிவி.தினகரனுக்கு கவர்னரின் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைத்ததும், கவர்னரிடம் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக உட்கார்ந்து பேசும் வாய்ப்பை டிடிவி.தினகரன் பெற்றதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்துடன் பார்க்கப்படுகிறது.
கவர்னருடன் சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த டிடிவி.தினகரன், ‘கவர்னர் எங்களது கருத்தை முழுவதுமாக கேட்டார். எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக அவர் கூறவில்லை. சட்டமுறைப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார்’ என தெரிவித்தார். ஆகஸ்ட் 22-ம் தேதி டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து திரும்பியபோது இப்படி உறுதிபட எந்தத் தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவுக்கு கவர்னர் மாளிகை வாசலை விசாலமாக திறக்க வைத்ததில்தான் திவாகரன் இயங்கியதாக கூறுகிறார்கள் கட்சி வட்டாரத்தில்! கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்ட சில நிமிடங்களில் திவாகரனும் அவரது மகன் ஜெய் ஆனந்தும் மரியாதை நிமித்தமாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்ததையும், கவர்னருடன் இவர்கள் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படமே வெளியானதையும் இந்தத் தருணத்தில் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆக, திவாகரனின் பேட்டிகள் இல்லாவிட்டாலும் டிடிவி அணியில் அவரது செல்வாக்கு உச்சம்தான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.