சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர், சிறையின் பிரதான நுழைவுவாயிலில் இருந்து நுழைவது போன்ற சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பல புகார்களை எழுப்பி, தன் மேலதிகாரியான டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் மீது, கடந்த ஜூலை மாதம் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல், பரப்பன அக்ரஹாரா சிறையில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாகவும் அவர் அறிககி அதில், சசிகலாவுக்கு தனி கட்டில், சமையலறை, சமைக்க சிறையிலுள்ள ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பதாக பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சியும் வெளியானது. மேலும், தன் அறையிலிருந்து சசிகலா மற்றும் இளவரசி, பேக் ஒன்றுடன் சாதாரண உடையில் எங்கோ கிளம்பத் தயாராக இருப்பது போன்ற சிசிடிவி காட்சியும் வெளியானது. இதையடுத்து, டி.ஐ.ஜி. ரூபா போக்குவரத்து துறை டி.ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் இதுகுறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஆளுக்கு ஒரு பையுடன், பரப்பன அக்ரஹாரா சிறையின் பிரதான நுழைவுவாயிலில் இருந்து நுழைவதுபோல் சிசிடிவி காட்சி ஆதாரத்தை டி.ஐ.ஜி. ரூபா ஊழல் தடுப்பு பிரிவிடம் கடந்த சனிக்கிழமை சமர்ப்பித்தார்.
“பெண்கள் சிறையில் ஆண் காவலர்கள் நுழைய அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறைக்கு வெளியேதான் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இருவரும் எங்கு சென்றுவிட்டு வந்தனர், யார் அதற்கு அனுமதி கொடுத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.”, என டி.ஐ.ஜி. ரூபா தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு அவர்கள் வெளியே செல்வது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.