நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கும், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் முதல்வர் பழனிச்சாமிக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ஏற்கனவே அரசு மீதும், சபாநாயகர் மீதும் ஸ்டாலின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், நாங்கள் வெற்றி பெற்றோம். மீண்டும் அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், ஏற்கனவே பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று அரசு வெற்றி பெறும் என்றார்.
இந்நிலையில், ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதற்கு முன் அரசு மீது நாங்கள் நம்பிக்கைத் தீர்மானமே கொண்டு வரவில்லை. சபாநாயகர் மீதுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் நடைபெற்றது. திமுக சார்பில் கொண்டு வரப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
மேலும், நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கும், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் உள்ள வித்தியாசத்தை முதல்வராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ளவில்லையே என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது என்றும் ஸ்டாலின் கேலி செய்தார்.
சூழ்நிலையை பொறுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து திமுக ஒரு நல்ல முடிவை எடுக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.