Advertisment

சசிகலா வீடியோ உண்மையானது தான்: டிஐஜி ரூபா

சிறைக்குச் சென்று சோதனைசெய்யும்படி என்னை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. அதெல்லாம் என்னிடம் முடியாது.

author-image
Anbarasan Gnanamani
Jul 20, 2017 08:18 IST
சசிகலா வீடியோ உண்மையானது தான்: டிஐஜி ரூபா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ரூபா மவுட்கில் அளித்த பேட்டியில், "கர்நாடக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.1 கோடியும், சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு ரூ.1 கோடியும் சசிகலா தரப்பினர் லஞ்சம் வழங்கியுள்ளார்கள்" என குற்றம் சாட்டினார்.

Advertisment

அதேபோல், கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்தது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய சிறைத்துறை டிஐஜி ரூபாவை, பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறைக்கு பணியிட மாற்றம் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்காக ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் சில கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகியது.

அந்த காட்சிகளில், சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும், தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஒரு அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் அவர் பேசுவதற்காக பார்வையாளர் அறையும் மற்றும் உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டது. மேலும், அந்த அறைகள் வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், சசிகலா நைட்டியுடன் சிறையில் நடமாடுவது போன்றும், அவர் ஷாப்பிங் சென்று வருவது போன்றும் வீடியோ வெளியானது.

இந்த நிலையில், போலீஸ் டிஐஜி ரூபா நேற்று அளித்த பேட்டியில், ''சிறைக்குச் சென்று சோதனைசெய்யும்படி என்னை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. அதெல்லாம் என்னிடம் முடியாது. சிறை மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களைப் போதையில் இருந்த சில கைதிகள் தாக்கினர் என்று எனக்கு தகவல் கிடைத்தது. எனவே, சிறைக்குச் சென்று சோதனை நடத்தினேன். அந்தச் சோதனையின்போது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அதைத்தான் அறிக்கையாக சிறைத்துறை டிஜிபி-க்கு அனுப்பிவைத்தேன். அந்த அறிக்கை ரகசியமானது. அதுபற்றி வெளிப்படையாகப் பேச முடியாது. சிறையில் சசிகலா கைப்பையுடன் இருப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ உண்மையானது தான்" என்றார்.

#Dig Roopa #Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment