Advertisment

“தமிழர்களே... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?” - பாரதிராஜா கேள்வி

‘தமிழர்களே... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?’ என தான் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு.. பாரதிராஜா மீது பாய்ந்தது புதிய வழக்கு!

‘தமிழர்களே... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?’ என தான் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

Advertisment

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரருக்கு எதிராகப் பல இடங்களில் இருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அந்த அறிக்கையில், “தமிழ் இனமும், மொழியும் எங்கே நிற்கிறது? எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலில் ஒவ்வொரு தமிழனும் இருக்கிறான். கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகவாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் தற்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை, எழுதும் எழுத்துக்குத் தடை, பேசும் பேச்சுக்குத் தடை. வாழ்கின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசிய கவிஞர் வைரமுத்துத்துவை அநாகரிகமாகப் பேசிய மதவாதிகளைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றான் பாரதிதாசன். அந்த செம்மொழியைம் மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே... உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? வாழ்வது தமிழ் மண், சுவாசிப்பது தமிழ்க்காற்று, சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேன், தேசிய கீதத்துக்கு மட்டும்தான் எழுந்து நின்று மரியாதை செய்வேன் என்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா?

அறிவார்ந்த தமிழ்க்கூட்டமே... நம் முதுகின்மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழிக்கவில்லையென்றால் உன் உயிரையும், மொழியையும் அழித்து, இனத்தையும் அழித்து வாழும் இந்தக் கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலமையே வேறு.

எந்தத் தமிழனாவது, ‘புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய்? தமிழில் சொல்’ என்று போராடியிருக்கிறானா கோயில்கள்? இல்லை. சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தியிருக்கிறானா? இல்லை. நாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். ஆனால், நீங்கள்தான் எங்கள் பூமியில் வாழ்ந்துகொண்டு எங்களைப் புறக்கணிக்கிறீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப் படித்ததுமில்லை, பழித்ததுமில்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு, எங்கள் தமிழை நீஷ பாஷை என்று கூறுகிறீர்கள்.

வர்ணாசிரமம் - மனுதர்மம் என்று தமிழர்களைப் பிரித்த இந்து மதவாதிகளே... இன்று தமிழ்நாட்டில் தமிழையே தவிர்க்கிறீர்களா? நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார்.  நீ எழ மாட்டாயா? தமிழ் நீஷ பாஷை, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட மறந்தது ஏன்?

தள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார், கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்துநின்ற வரலாறு தமிழ்நாட்டில் உண்டு தெரியுமா? தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழர்களின் காணிக்கையைப் பெற்றுக்கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழவேண்டிய சந்தர்ப்பம் இது. ‘பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவன் நடுங்கிப் புலியென செயல்செய்யப் புறப்படு வெளியில்’ என்று பாடிய பாரதிதாசன் பாடலைப்போல், ஒன்றுசேர் தமிழா. தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். ஒற்றுமைப்படு... தமிழால், இனத்தால் ஒன்றுசேர். தமிழ் வாழ்க” என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

Vijayendrar Kanchi Kamakoti Peetham
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment