இயக்குநர் பா.இரஞ்சித், கல்விக்கான ஒருநாள் தேசிய கருத்தரங்கத்தை நாளை நடத்துகிறார்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’, பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. அந்த வரிசையில், ‘கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்’ என்ற ஒருநாள் தேசிய கருத்தரங்கத்தை நாளை நடத்துகிறது. சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
காலை 9.15 மணிக்குத் தொடங்கும் தொடக்க அமர்வில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நோக்கவுரை ஆற்ற, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தலைமை தாங்கிகிறார். மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் சரியிசை முழக்கத்துடன் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறார். அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் அனில் சட்கோபால் தொடக்க உரை நிகழ்த்துகிறார்.
தமிழ்நாடு திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் நாகநாதன், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் உரிமை குறித்துப் பேசுகிறார். எஸ்பிஓஏ பள்ளிகளின் தாளாளர் தாமஸ் பிராங்கோ வாழ்த்துரை வழங்க, இயக்குநர் பா.இரஞ்சித் தீர்மானத்தை முன்மொழிகிறார். 11.30 மணியுடன் இந்த அமர்வு முடிகிறது.
காலை 11.45 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது அமர்வில், மருத்துவக் கல்வியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் ரெக்ஸ் சற்குணம் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்குகிறார். மருத்துவ மாணவர் சேர்ப்பும், பொது சுகாதாரமும் என்ற தலைப்பில் மருத்துவர் அமலோற்பவநாதன் உரையாற்றுகிறார். மருத்துவக் கல்வியும், சமூக நீதியும் என்ற தலைப்பில் மருத்துவர் அனு ரத்னாவும், குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சிவக்குமாரும் உரையாற்றுகின்றனர்.
மருத்துவக் கல்வியின் சமூக அக்கறைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் பி.கே.ராஜனும், மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதாரத்தின் பொருளாதாரம் என்ற தலைப்பில் கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த மணியும், பண்பாட்டுச் சூழலில் மருத்துவக்கல்வி என்ற தலைப்பில் நாடகவியலாளர் பிரளயனும் உரையாற்றுகின்றனர். மதியம் 1.30 மணிக்கு இந்த அமர்வு நிறைவுபெறும்.
பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் மூன்றாவது அமர்வு, ‘என்ன செய்யப்போகிறோம்?’ என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. மருத்துவர் காசி இந்த அமர்வுக்குத் தலைமை தாங்க, மருத்துவர் எழிலன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் லட்சுமணன், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆய்வு மாணவரான ஸ்ரீநாத், திமுக மாணவர் அணியைச் சேர்ந்த எழிலரசன், தலித் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரான்சிஸ், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த அன்சாரி, முற்போக்கு மாணவர் கழகத்தைச் சேர்ந்த பாரதி பிரபு, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாரியப்பன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தினேஷ், திராவிடர் மாணவர் கழகத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை 4.15 மணிக்கு இந்த அமர்வு முடிவடைகிறது.
மாலை 4.30 மணிக்குத் தொடங்கும் நிறைவரங்கிற்கு, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி தலைமை தாங்குகிறார். அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹரகோபால் நிறைவுரை வழங்க, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் வாழ்த்துரை வழங்குகிறார். தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பிரின்ஸ் கஜேந்திர பாபு, நன்றியுரை வழங்குகிறார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள 9789321307/9443957700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.