தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் மீதான பிரச்சனை, பொங்கலையும் தாண்டி ஓடும் போலிருக்கிறது. தினம் தினம் ஒரு சிக்கல் உருவாகிக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு திட்டங்களை எதிர்த்து அப்படத்தில் விஜய் பேசிய வசனங்களை நீக்கக் கோரி தமிழக பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தயாரிப்பு நிறுவனமோ படத்தில் உள்ள எந்தவொரு காட்சியையும் நீக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது(எப்போ வேண்டுமானாலும் மாறலாம்). இந்த நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது நெறியாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசிய ஹெச்.ராஜா, தான் மெர்சல் படத்தை பார்த்ததாகவும், இணையதளத்தில் டவுன்லோட் செய்து பார்த்ததாகவும் கூறியிருந்தார். தெரிந்து சொன்னாரா, அல்லது தெரியாமல் வாய் தவறி சொல்லிவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், இச்சம்பவம் இப்போது மெர்சல் ஆகியுள்ளது.
சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும், ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சற்று காட்டமாக, "மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்?. உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியைப் பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தங்களது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
விஷயம் இப்படி சென்றுக் கொண்டிருக்க, இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டரில் ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
"நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும், அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!
மரியாதைக்குரிய எச்.ராஜா
அவர்களுக்குரிய மரியாதையை
குறைக்க வேண்டும்-அவர் களவாடி(யாய்)
மெர்சல் கண்டிருந்தால்..!
என்று கவிதை நடையில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.