ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷாலுக்கு ஆதரவாக ட்விட்டரில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக விஷால் திடீரென அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான நாளை, தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார் விஷால். விஷாலின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
இயக்குநர் சுசீந்திரன், விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷாலுக்கு எனது வாழ்த்துகள். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும்போதும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கும்போதும் 100% அவர் தோற்றுவிடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அந்தக் கருத்துக் கணிப்பை, அவருடைய உழைப்பும், உண்மையும் பொய்யாக்கி, விஷால் ஜெயித்தார்.
இந்தத் தேர்தலிலும் விஷால் ஜெயிப்பார்னு நம்புறேன். விஷாலுக்காக நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். பணம் வாங்காமல் ஓட்டுப்போடும் மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தும்” என்று கூறியுள்ளார்.
இன்னொரு பதிவில், “விஷாலுக்காக நான் பிரச்சாரம் செய்வேன். கண்டிப்பா இந்த லெட்டரைப் பார்த்தா குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் பரம்பரையை சேர்ந்தவன், ‘நீ பிரச்சாரம் செய்தால் எவன்டா ஓட்டு போடுவானு’ கேட்பாங்க. எனக்கு எல்லா ஊரிலும் தம்பிமார்கள் இருக்குறாங்க, மாற்றம் வராதா என்ற ஏக்கத்துடன். அந்த தம்பிமார்கள் எனக்காக விஷாலுக்கு ஓட்டு போடுவாங்க” எனத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.
மற்றொரு பதிவில், “தமிழ் என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவன். அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன். விஷாலுக்கு ஓட்டு போடுங்க, மக்களுக்காக உண்மையா உழைப்பாரு” என்று சொல்லி, ட்விட்டரில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.