இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன், உடல்நலக்குறைவால், சென்னையில் இன்று ( 12ம் தேதி) அதிகாலை காலமானார்.
இயக்குனர் பா. ரஞ்சித், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கர்லப்பாக்கத்தில் பிறந்தவர். தந்தை பாண்டுரங்கன் விவசாய தொழில் செய்துவந்தார். ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், சென்னையில் பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின் இயக்குனர்கள் சிவசண்முகம் லிங்குசாமி உள்ளிட்டோர்களிடம் பணிபுரிந்தார். பின் வெங்கட்பிரபு இயக்கத்திலான சென்னை 600028 படத்தில் .உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களின் மூலம், கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். நீலம் பிக்சர்ஸ் மூலம், தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில், பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ( 12ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு அவர் காலமானார்.
பாண்டுரங்கனின் இறுதிச்சடங்கு, சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டுரங்கனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.