நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பரபரப்பான தமிழக அரசியல் களம், நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா பிரச்னை உள்ளிட்டவைகளுக்கு இடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தமிழக தலைவர் தமிழிசை தலைமையிலான பாஜக-வினர் இன்று சந்தித்தனர்.
முதல்வர் பழனிச்சாமியின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இச் சம்பவத்திற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற இழப்புகள் இனி வரக் கூடாது என்பதே பாஜக-வின் குறிக்கோள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஒரு முறை தோல்வியடைந்தால் மாணவர்கள் மனம் தளரக் கூடாது. மூன்று முறை இத்தேர்வை எழுதலாம். நீட்டுக்கு ஆதரவாக உள்ள மாணவர்கள் சென்ற முறை வாய்ப்பை இழந்த போதும், இந்த முறை வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இப்பிரச்னையை அரசியல் நோக்குடன் முன்னிறுத்தாமல் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.
மேலும், எந்த ஒன்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கும். பாதகமான பக்கத்தை மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது எனவும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.