டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகத்திற்கு விரோத செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆளுநரை சந்தித்தோம். ஆனால், இது ஏதோ உட்கட்சி பிரச்சனை என காரணம் கூறி ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார்.
சட்டமன்றத்தை கூட்டினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற காரணத்தினால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் உள்நோக்கத்தோடு அவசர அவசரமாக 18 உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் நீக்கியுள்ளார்.
மத்திய பாஜக அரச, தனது கைப்பாவையாக கருதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசை பாதுகாக்கிறது. மத்திய அரசின் எண்ணப்படியே, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. இது போன்ற செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது தற்காலிக ஆளுநராக இருந்தாலும், நிரந்தர ஆளுநர் என்றாலும் ஒன்றாக தான் இருக்கும். ஆளுநர் என்பவர் எங்கிருந்தாலும், முடிவு எடுக்க முடியும். ஆனால், மத்திய பாஜக அரசு தனது கட்சியில் தலைவர்களாக இருந்தவர்களையே ஆளுநராக நியமித்து வருகிறது. இதன்மூலம், மத்திய பாஜக அரசு என்ன நினைக்கிறதோ அதனை செயல்படுத்துபவர்களாக தான் ஆளுநர் பொறுப்பில் இருக்க முடியும். தற்போது தமிழகத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை பார்க்கும்போது, மத்திய அரசின் பிரதிநிதியாக தான் ஆளுநர் செயல்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது என்று கூறினார்.