சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுவதாகவும், அவர் அறிவித்த நியமனங்களும் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கழகத்தின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் நேக்கத்தில் டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள் செல்லாது என்றும், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் இன்னொருவர் இருந்து செயல்படுவது என்பதால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், பொதுச் செயலாளருக்கான முழு அதிகாரமும் இனி அதிமுக நிர்வாகப் பொறுப்புகளை ஏற்கும் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அளிக்கப்படுகிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் இந்த பொதுக் குழு கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த தினகரன், "அதிமுக அம்மா அணியின் பொதுக்குழுவைக் கூட்டுவது என்றால் பொதுச்செயலாளரோ, அல்லது அவரது பிரதிநிதியான துணைப் பொதுச்செயலாளரோதான் கூட்டவேண்டும். அல்லது 500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, பொதுச்செயலாளர் அனுமதியுடன் கூட்ட வேண்டும். அந்த நடைமுறை பின்பற்றாததால் இந்தப் பொதுக்குழு செல்லாது. இது பொதுக்குழு அல்ல, ஒரு கூட்டம்!" என்றார்.
பொதுக்குழு குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் அளித்த பேட்டியில், "சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை, தற்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது. தினகரன் தலைமையில் நடத்தப்படும் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது" என்றார்.
இந்த நிலையில், திவாகரனின் மகன் ஜெயானந்த் ஓ.பி.எஸ்.க்கும், இ.பி.எஸ்.க்கும் நன்றி தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "பன்னீர்செல்வமும், எடப்பாடியும் இணைந்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் மறைமுகமாக சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அப்படியானால், சசிகலா பொதுச்செயலாளர் என்ற வகையில் பிறப்பித்த உத்தரவில் பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கிவிட்டார். அதேபோல எடப்பாடி பழனிச்சாமியை தலைமை கழக செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கியிருந்தார்.
எனவே, பொதுச்செயலாளரால் பதவி நீக்கம், உறுப்பினர் பதவி பறிப்பு போன்றவற்றுக்கு ஆளானவர்கள் இணைந்து பொதுச்செயலாளரை நீக்க முடியாது. மேலும், சசிகலாவை பொதுச்செயலாளர் என்று ஏற்கனவே பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒப்புக்கொண்டனர்.
எனவே இவர்கள் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியிருப்பது எம்ஜிஆர் எழுதி வைத்த கட்சி சட்டத்திற்கு விரோதமானது. இந்த நேரத்தில், 'சின்னம்மாவை' பொதுச்செயலாளர் என்று ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.