மன்னார்குடியில் ஐ.டி. அதிகாரிகளுடன் திவாகரன் ஆதரவாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. ஆவணங்களை சோதனை போட்டபிறகே அனுப்புவோம் என அவர்கள் கூறினர்.
சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று (நவம்பர் 10) 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்டம்தான் சசிகலா குடும்பத்தினரின் பூர்வீகம் என்பதால், ஐ.டி. அதிகாரிகளின் பாய்ச்சல் அங்கு அதிகமாகவே இருந்தது. அங்கு மட்டும் மொத்தம் 20 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை போட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேற்று இரவுடன் சோதனை முடிந்த நிலையில், எஞ்சிய 15 இடங்களில் 2-வது நாளாக இன்று சோதனை நடத்தினர். இங்கு பணிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளில் அநேகம் பேர் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத் தாயார் கல்லூரியில் 2-வது நாளாக இன்று சோதனை நடந்தது. அப்போது கல்லூரிக்குள் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுமதிப்போம் என திவாகரன் ஆதரவாளர்கள் கூறினர். காரணம், வெளியில் இருந்து ஏதாவது எடுத்து வந்து உள்ளே வைத்துவிட்டு பிறகு கைப்பற்றியதாக அதிகாரிகள் கூறிவிட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இன்று மதியம் கல்லூரியில் இருந்து நிறைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு கார்களில் அதிகாரிகள் கிளம்பினர். அப்போது திவாகரன் ஆதரவாளர்கள் மொத்தமாக அந்தக் கார்களை முற்றுகையிட்டு, ‘எங்களிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்றனர். இதற்கு அதிகாரிகள் ஒப்புக் கொள்ளாததால் இரு தரப்புக்கும் இடையே காரசாரமாக வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இது குறித்து திவாகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘வெளியே இருந்து 25-க்கும் மேற்பட்ட பைகளை அதிகாரிகள் எடுத்து வந்தார்கள். அவற்றில் என்ன கொண்டு வந்தார்கள்? என எங்களுக்கு தெரியாது. அதேபோல இங்கிருந்து என்ன எடுத்துச் செல்கிறார்கள்? என்பதையும் எங்களிடம் காட்ட மறுக்கிறார்கள். இதனால் பொய் வழக்குகளை போட திட்டமிடுகிறார்களோ? என தோன்றுகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையால் கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்துவோம்’ என்றார்கள் அவர்கள். இதற்கிடையே அதிகாரிகளுக்கு இடைஞ்சல் செய்த திவாகரன் ஆதரவாளர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு அதிகாரிகள் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
திவாகரன் கல்லூரியில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.