தீபாவளியையொட்டி மழையில் நனையவிருக்கிறது தமிழ்நாடு. அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 18-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் ஆந்திராவில் மழை அறிகுறிகள் அதிகமாகியிருக்கின்றன. ஆந்திர கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து, தெற்கே நகர்ந்தால் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 111 சதவீதம் அதிகம் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தென்மேற்கு பருவமழையும் இயல்பைவிட 29 சதவீதம் அதிகமாகவே பெய்திருக்கிறது.
வளிமண்டல மேலடுக்கில் நிலவி வரும் சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர், சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. தொடர் மழையால், வேலூர், சேலம், திருப்பூர், கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காட்சி அளிக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சம் வேலூர் வாணியம்பாடி மற்றும் ஒசூரில் தலா 7 செமீ, திருப்பூர் உடுமலைப்பேட்டை, தேனி போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, வால்பாறையில் தலா 5 செமீ மழை பதிவானது.
இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தீபாவளி வரும் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புயல் அபாயம் இருப்பதாக கூறப்படுவது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தமிழகத்துக்கு தற்போது புயல் வர வாய்ப்பு இல்லை. நாளை ஆந்திரா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது.’ என்றார்.
தீபாவளி தப்பித்தது!