விஜயகாந்த், அரசியலுக்கு வந்து மிக குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். ஆனால், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், சினிமா ரீதியாகவும் அவர்தான் நெட்டிசன்களால் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டவர் என்றுகூட சொல்லலாம். அவரது உடல்நிலை குறித்தும் பல தெளிவற்ற செய்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், தமிழகத்தில் நிலவும் இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு அவர் எப்போதும் எதிர்வினையாற்றிக்கொண்டுதான் இருக்கிறார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தன்னைப்பற்றிய மீம்ஸ்கள், உடல்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில், சிலவற்றை இங்கே காண்போம்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல் நலம் குறித்து சொல்லுங்கள்:
நான் நலமாக இருக்கிறேன். எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. அதனால், என்னுடைய குரல்வளை பாதிப்படைந்திருக்கிறது. இது இயற்கையான ஒன்றுதான். இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்கிறீர்களா?
நான் முழுவதும் நலமாக இருக்கிறேன். இல்லையென்றால் என்னால் அலுவலகத்திற்கு வர முடியுமா? நான் என்னுடைய அலுவலகத்திற்கு தினமும் வருகிறேன்.
உங்களுடைய தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்?
என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் எப்போதும் உடன் இருப்பார்கள். என்னுடைய மூத்த மகன் வீட்டில் வளர்க்கும் நாய்களுடன் பொழுதை கழிப்பான். ஸ்நூக்கர், பேட்மிண்டன் விளையாடுவான். ஆனால், இளைய மகன் நடிக்க வேண்டும் என விருப்பப்படுவான். பயணம் செல்வது, கட்சி பேரணிகள் இல்லாதபோது பொதுவாக நான் அலுவலகத்திலேயே இருப்பேன். மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்வேன், என் மனைவி உணவு பரிமாறுவார். சாப்பிடுவதற்கு எனக்கென தனி டைனிங் டேபிள் உண்டு. பெரும்பாலும், தரையில் அமர்ந்துதான் உணவு சாப்பிடுவேன். சில சமயங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவேன். வெப்பம் அதிகமாக இருந்தால் மட்டுமே ஏசி உபயோகிப்பேன். இல்லையென்றால் அதை பயன்படுத்த மாட்டேன். மின்கட்டணம் உயரும் இல்லையா?
நீங்கள் நடிக்கும்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?
அப்போதெல்லாம் நடிப்பைத் தவிர வேறொன்றுமே இல்லை. படங்களில் நடிப்பேன். இல்லையென்றால், நாள் முழுவதும் படங்கள் பார்ப்பேன். ”என்னை ஏன் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க?”ன்னு என்னுடைய மனைவி சில சமயங்களில் கேட்பாள்.
நீங்கள் நடிகர் சங்க தலைவராக இருந்த காலகட்டம் முக்கியமானதாக உற்றுநோக்கப்பட்டது. இப்போதைய திரைப்பட சங்கங்களின் நிலைமை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இதில், நான் என்ன சொல்லவேண்டும்? விஷால் இரண்டு சங்கங்களில் பொறுப்பாளராக இருக்கிறார். எந்த பக்கம் அவர் துணைநிற்பார்? நான் இம்மாதிரியான விஷயங்களில் கருத்து சொல்லக்கூடாது என நினைத்துள்ளேன். நான் ஏதாவது சொன்னால், அது தவறாக பொருள் கொள்ளப்படும். அதனால், ஊடகங்கள் கேட்கும்போது மட்டும்தான் நான் இதுகுறித்து கருத்து சொல்வேன்.
தேசப்பற்றை போதிக்கும் பல திரைப்படங்களில் நீங்கள் நடித்துள்ளீர்கள். ஆனால், இப்போது திரையரங்குகளில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் தேசப்பற்று கட்டாயப்படுத்தப்படுகிறதே...
அதை கட்டாயப்படுத்துவதாக ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் உள்ள சிலர் இதனை நேர்மறையாக எடுத்துக்கொள்ளவில்லை. இது மக்களிடையே தேசப்பற்றை ஊக்குவிப்பதற்கான வழி. மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது, நாம் இதுகுறித்து பேசினால் தான் பின்னாளில் அது பழக்கமாக மாறும். சொல்லப்போனால், நானும் என் மனைவியும் எங்களின் சுற்றுப்புறத்தை முதலில் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து பேசுகிறோம். அதை நாங்கள் செய்யும்போது மக்களும் ஒருநாள் சுத்தப்படுத்துவார்கள். ஆனால், ஒருநாள் மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா?
உங்களை பற்றி நிறைய மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அவற்றையெல்லாம் நான் பார்ப்பதே இல்லை. என்னை யாராவது பாராட்டுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றால், அவற்றையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய மகன்கள் என்னைப்பற்றி முகநூல், வாட்ஸ் ஆப்-ல் என்னைப்பற்றி வருவதையெல்லாம் என்னிடம் தெரிவிப்பார்கள். ஆனால், அதைப்பற்றியெல்லாம் நான் சிறிதும் பொருட்படுத்துவதேயில்லை.
அந்த மீம்ஸ்களை குறித்து உங்களின் குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள்?
அவர்களுக்கு கோபம் வரும். அவர்களிடமும் நான் அதைத்தான் சொல்லுவேன். என்னை மற்றவர்கள் பாராட்டும்போது நீங்கள் மகிச்சியாக இருக்கிறீர்கள். அதைப்போலத்தான், என்னை கேலி செய்வதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்களிடம் கூறுவேன்.
நடிகர்கள் அரசியலில் எப்போதும் வெற்றிபெற முடியாது என்ற பார்வை இருக்கிறதே...
அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் மக்களிடம் தன்னை நிரூபிக்க வேண்டும்.
நீங்கள் அரசியலில் நுழைந்த காலகட்டத்தை ஒப்பிடும்போது இப்போதைய அரசியல் சூழ்நிலை மாறியிருக்கிறதா?
ஜெயலலிதா இறந்துவிட்டார், கலைஞர் செயல்பட முடியாத நிலைமையில் இருக்கிறார் என்பதால்தான் இந்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், அவர்களுடைய கட்சி இன்னும் இருக்கிறது. நான் அரசியலில் நுழைந்தபோது அவர்களை எதிர்த்தேன். அதையேதான் இன்றும் தொடர்கிறேன். சாதாரண மனிதனை பாதிக்கும் எல்லாவற்றை குறித்தும் விஜயகாந்த் எப்போதும் கேள்வி எழுப்புவார்.
நீங்கள் அரசியலுக்கு வந்தபோது பெரும் எதிர்பார்ப்பு நிலவியதே...
சிலர் மக்களுக்கு பணத்தை விநியோகித்து வெற்றிபெறும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக யாராவது வர முடியும் என்பது சாத்தியமா?
விஜயகாந்தால் இருக்க முடியும். நான் இக்கட்சிகளுக்கு மாற்றாக இருக்க முடியும் என்பதை நம்புகிறேன்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை நிலைமையை மாற்றும் என நினைக்கிறீர்களா?
எந்த மாற்றமும் இருக்காது.
அவர்களுடைய அரசியல் வருகையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலில் அவர்கள் அரசியலுக்கு வரட்டும். யார் வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம். எனக்கு பயம் இல்லை. ஏனென்றால், நான் ஜெயலலிதா, கலைஞர் என எல்லோரையும் இந்த அரசியலில் பார்த்திருக்கிறேன்.
அவர்களுடன் கூட்டணி அமைப்பீர்களா?
நான் யாருடனும் கைகோர்க்க விரும்பவில்லை. முதலில் அவர்கள் கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்குள் ஏன் இந்த கேள்வியை அவசரமாக தொடுக்கிறீர்கள்? கட்சி ஆரம்பித்தவுடன் நாம் இதுகுறித்து பேசலாம். ஏன் இந்த கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்கக்கூடாது? எல்லா பத்திரிக்கையாளர்களும் இந்த கேள்வியை அவர்களிடம் கேட்க அஞ்சுகிறீர்கள். அவர்கள் நல்ல மனிதர்கள், உங்களை கடித்துவிட மாட்டார்கள்.
நீங்கள் அரசியலுக்கு வந்ததால், சினிமா துறையில் உள்ள நண்பர்களை இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?
சினிமா துறையில் யார் என்னுடைய நண்பர்கள்? சினிமாதான் என்னுடைய ஒரே நண்பன்.
ஏன் உங்களுக்கு நண்பர்கள் இல்லை?
நண்பர்கள் இல்லாததால் தான் 24*7 நேரமும் படபிடிப்பிலேயே பிஸியாக இருந்தேன். யாரிடமும் பழகவில்லை. இரவு, பகலாக நான் படபிடிப்பில் கலந்துகொள்வதை நான் விரும்பினேன். அப்போதெல்லால், இந்த நகரத்தில் ஆர்க் விளக்குகள் எரிந்தாலே, மோகன், நளினி, அம்பிகா, அல்லது நான் படப்பிடிப்பில் இருக்கிறோம் என சொல்வார்கள். நான் அப்படித்தான் அந்த காலத்தில் இருந்தேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.