தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட பல இடங்களில், இன்று அதிகாலை முதல், வருமான வரித்துறை ரெய்டு நடத்திவருகிறது. சசிகலாவின் கணவர், உறவினர்கள், தெரிந்தவர்கள், ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரது வீட்டிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரெய்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருமான வரித்துறை நடத்தும் சோதனைகள் கன்னித்தீவு கதையை போல் தொடர்கிறது. ஏற்கனவே வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எடுத்த நடவடிக்கை என்ன?" என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய ஸ்டாலின், "தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக பேச என்னிடம் பெரிய பட்டியலே உள்ளது. சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டு, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து நடந்த ரெய்டு, ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினராக இருக்கக்கூடிய ராமலிங்கம் வீட்டில் நடந்த ரெய்டு, அன்புநாதன் வீட்டில் நடந்த ரெய்டு, தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டில் நடந்த ரெய்டு போன்றவற்றில் வருமான வரித்துறையினர் எடுத்த நடவடிக்கை என்ன?. தமிழகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனைகள் கன்னித்தீவு கதையை போல் தொடர்கிறது கொண்டே போகிறது. ஆக, இந்த ரெய்டும் அது போல ஒன்றாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.
இந்த ரெய்டு நடத்தப்படுவது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையோ, அதிகாரிகளையோ சென்று சந்தித்து கேள்வி எழுப்புங்கள். பின், அவர்களை பதிலை என்னிடம் சொல்லுங்கள். அதையடுத்து, நான் பதில் சொல்கிறேன்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.