உலக அரங்கில் இந்தியா வல்லரசாக உயர சபதம் ஏற்போம்: மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து!

சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் மிகப்பெரிய பங்களிப்பை எண்ணி எண்ணி வியந்து- வீரம்செரிந்த அவர்களின் போராட்டத்தை நான் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக் காற்றைச் சுவாசிக்கும் இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து போராடிய காரணத்திற்காகத் தலைவர்கள் பலர் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்நிய நாட்டின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள். தூக்குமேடைகளைச் சந்தித்தார்கள்.

இப்படி மிகக் கடுமையான அறப்போராட்டங்களுக்குப் பிறகு அனைத்துமுனைகளிலும் சுதந்திரத்தை அனுபவிக்கும் அடிப்படை உரிமையை நமக்குப் பெற்றுத் தந்தார்கள். அரிய சுதந்திரம் கிடைக்கப் போராடிய தலைவர்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் அவர்களது உயரிய தேசப்பணியைப் போற்றிப் புகழாரம் சூட்டும் தினம் இந்த சுதந்திர தினம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் மிகப்பெரிய பங்களிப்பை எண்ணி எண்ணி வியந்து- வீரம்செரிந்த அவர்களின் போராட்டத்தை நான் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காகவும், அவர்களது வாரிசுகளுக்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தியது. போராடிய தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திரத்திற்கு எத்திசையிலிருந்தும் எவ்வகை ஆபத்தும் நேர்ந்து விடாமல் கட்டிக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உணர்வுமிக்க உரிமை என்றே கருதுகிறேன்.

ஆகவே சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைத் தூக்கியெறிந்து அனைவரும் ஒற்றுமையுடனும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாகவும் சம உரிமையுடனும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள சகல சுதந்திரங்களுடனும் செயலாற்றி இந்நாட்டின் இறையாண்மைக்கும்,ஒருமைப்பாட்டிற்கும், பன்முகத்தன்மைக்கும், முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடவும், உலக அரங்கில் இந்தியா ஒரு வல்லரசாக உயரவும் இந்த சுதந்திர தினத்தன்று நாம் அனைவரும் முழு மனதுடன் சபதம் ஏற்போம்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close