ஆர்.கே.நகரில் ரூ 89 கோடி பண வினியோகத்தில் நடவடிக்கை எடுத்த பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை வைத்திருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறக்கி மும்முரமாக பிரசாரம் செய்தன. அப்போது ஆளும்கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சார்பில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வினியோகம் செய்ததாக புகார் எழுந்தது.
அதை நிரூபிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் நிறுவனங்களில் மத்திய வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ 89 கோடி வினியோகம் செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து தேர்தலை நிறுத்தி வைத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தமிழக போலீஸாருக்கு பரிந்துரை செய்தது.
ஆனாலும் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 2-வது வாரத்தில் தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்பு தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் விரும்புவதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த முறை திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட மருதுகணேஷ் இன்று (அக்டோபர் 21) இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு ஒரு மனு அனுப்பியிருக்கிறார். அதில், ‘கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி நடைபெற்ற ரூ89 கோடி பண வினியோகம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துவிட்டு, இடைத்தேர்தலை நடத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காதபட்சத்தில், நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர இருப்பதாக தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக திடீரென எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.