காவிரி விவகாரம்: மீண்டும் கூடுகிறது திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்

மத்திய அரசுக்குக் காவிரி விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து ஆலோசிக்க இன்று மாலை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூடுகிறது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் அளிக்கும் வகையில் மேற்கொண்டு போராட்டங்கள் நடத்தத் திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்குச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. மேலும் காவிரி விவகாரத்தில் இன்று காலை 10 மணி அளவில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தத் திமுக தனது முதல் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ஏப் 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் உட்படக் காவிரி உரிமை மீட்பு பயணம் போன்ற போராட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டு நடைபெற்றது. பின்னர் தமிழகம் வந்த மோடிக்கு அனைத்து எதிர்க்கட்சியினரும் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பைப் பின்பற்றாத மத்திய அரசைக் கண்டித்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் விவகரத்திம் மே 3ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேர்தலுக்காகவே தமிழர்களின் உரிமை மறுக்கப்படுவதாகத் தமிழகத்தின் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close